×

நாட்டிற்காக உயிர் தியாகம்! ஆசையாய் கட்டிய வீட்டில் கால் வைக்காமல் சென்ற ராணுவ வீரர் பழனி

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த இரு நாட்டு ராணுவங்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு மகனாகப் பிறந்தார் இந்த பழனி. இவருக்கு வயது தற்போது 40. இவர் தன்னுடைய பதினெட்டாம் வயதிலேயே இந்திய ராணுவத்தில் இணைந்து, தொடர்ந்து
 

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் நேற்று இரவு நடந்த இரு நாட்டு ராணுவங்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு மகனாகப் பிறந்தார் இந்த பழனி. இவருக்கு வயது தற்போது 40. இவர் தன்னுடைய பதினெட்டாம் வயதிலேயே இந்திய ராணுவத்தில் இணைந்து, தொடர்ந்து 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். தற்போது ஹவில்தாராக உள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு வானதி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்த இவருக்கு 10 வயதில் பிரசன்னா என்ற மகனும், எட்டு வயது நிரம்பிய பெண் குழந்தை திவ்யா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் ஆசை ஆசையாய் ராமநாதபுரம் அருகே உள்ள கழுகூரணி என்ற இடத்தில் இவர்களால் புதிதாக கட்டப்பட்ட இல்லம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜூன் 13ஆம் தேதி புது மனை புகு விழா பால் காய்ச்சப்பட்டு குடியேற்றம் நடந்துள்ளது.

இந்த புதிய இல்ல திறப்பு விழாவிற்கு தான் எப்படியும் வந்து விடுவேன் என தன் வீட்டாரிடம் உறுதி அளித்திருந்த பழனி லடாக் எல்லை பிரச்சினை காரணமாக விடுமுறை கிடைக்காததால் ஊர் திரும்ப முடியாத சூழ்நிலையில் இருந்துள்ளார். இதை தன் குடும்பத்திடம் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதனால், இவர் இல்லாமலேயே கடந்த 13ம் தேதி இல்ல திறப்பு விழா நடந்துள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தொலைபேசியில் வீட்டாரை தொடர்பு கொண்ட பழனி இன்னும் சில தினங்களில் ஊருக்கு வந்துவிடுவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் கட்டி முடிக்கப்பட்ட புதிய இல்லத்தில் கால் வைக்க கூடிய வாய்ப்பு இல்லாமலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இவருடைய உடன் பிறந்த இளைய சகோதரர் இதயக்கனியும் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது