×

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு என்ன காரணம்? – கொந்தளிக்கும் சமூகநல ஆர்வலர்கள்

போக்சோ சட்டம் ஊரடங்கில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் சொல்கின்றனர். தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் நைசாக பேசிய பக்கத்துவீட்டுக்காரர் ராஜா, உன் மாமா அழைத்து வரச்சொன்னார் என்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியுடன் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜா, தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாள் சிறுமி என அவளை ஈவு
 

போக்சோ சட்டம்

ஊரடங்கில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் சொல்கின்றனர். தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் நைசாக பேசிய பக்கத்துவீட்டுக்காரர் ராஜா, உன் மாமா அழைத்து வரச்சொன்னார் என்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சிறுமியுடன் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜா, தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாள் சிறுமி என அவளை ஈவு இரக்கமற்று கொலையும் செய்துள்ளார்.

சிறுமியின் சடலத்தைக் கண்டெடுத்த போலீசார், நடத்திய விசாரணையில் ராஜாவின் வக்கிர புத்தி வெளியில் தெரிந்தது. பூ வியாபாரியான ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 18- வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்கத்தான் போக்சோ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச்சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தபோதிலும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை என்பது வேதனைக்குரியது.

சிறுமிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தைத் தொடர்ந்து திருச்சி சோமரசன்பேட்டை காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தில் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது. பிற்பகலில் காட்டுப்பகுதிக்குச் சென்ற சிறுமி, பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சிறுமியின் சடலத்தை எடுத்துச் செல்ல வந்த ஆம்புலன்ஸின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இதையடுத்து டி.ஐ.ஜி ஆனிவிஜயா சம்பவ இடத்துக்கு வந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சிறுமி மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனையில் சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்தத் தகவல் வெளியான பிறகே சோமரசன்பேட்டை காவல் நிலைய வழக்கின் தீவிரம் குறைந்தது.

இதையடுத்து, சிறுமியை ஒருதலையாக காதலித்தவர் உள்பட சிலரிடம் போலீசார் விசாரித்தனர். சம்பவ இடத்தில் சிறுமி எரிக்கப்படவில்லை. அதற்கான தடயங்களும் அங்கு இல்லை என போலீசார் கூறிவருகின்றனர். அதனால் சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் புலன்விசாரணை செய்துவருகின்றனர். சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இந்தக் கொடூர சுவடு மறைவதற்குள் வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மற்றொரு சிறுமி, அத்தை மகனாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமடைந்துள்ளார். அவரின் மரணமும் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. இந்தச் சம்பவத்தில் சிறுமியின் அத்தை மகன் ராம்கியை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டில் அடைக்கப்பட்ட சிறுமி

இந்தச் சூழலில் சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியுள்ளார். திருத்தணி ரயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி சிறுமி ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அதைக் கவனித்த திருத்தணி ரயில்வே போலீசார், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு நடந்த கொடுமைகளை ஒவ்வொன்றாக கூறியதும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமி, தன்னுடைய வீடு சென்னை அயனாவரத்தில் இருக்கும் தகவல் தெரிந்ததும் அயனாவரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஊரடங்கு காலக்கட்டம் என்பதால் சென்னையிலிருந்து திருத்தணிக்கு அயனாவரம் போலீசார் சென்று சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது சிறுமியிடம் விசாரித்தபோது கடந்த மார்ச் மாதம், வீட்டில் கோபித்துக் கொண்டு சிறுமி வெளியில் வந்துள்ளார். அப்போது பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றிதிரிந்த சிறுமியை திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பேசியுள்ளார். சிறுமியிடம் அன்பாகவும் ஆறுதலாகவும் பேசிய வெங்கடேசன், அவரை திருத்தணிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மார்ச் மாதத்திலிருந்து ஜூலை வரை சிறுமியை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளார். அப்போது உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தக் கொடுமை மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ந்துள்ளது.

பாதுகாக்கும் அமைப்புகள்

இந்தச் சமயத்தில் வெங்கடேசன், வேலைக்காக ஆந்திரா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது, சிறுமியை தனக்கு தெரிந்த மேஸ்திரி ஒருவரிடம் விட்டுச் சென்றுள்ளார். அங்கிருந்து தப்பிய சிறுமி, திருத்தணி ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார். சிறுமியின் குடும்பம் குறித்து போலீசார் விசாரித்தபோது அவரின் அம்மா மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் பாட்டியின் அரவணைப்பில்தான் சிறுமி வளர்ந்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறியதால் சிறுமிக்கு இந்தக் கொடுமை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சிறுமி அளித்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் தேவிகா, விசாரித்துவருகிறார். ஊரடங்கு காலக்கட்டத்தில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான தீர்வுகளை குழந்தைகள் நல ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் மனநல ஆலோசகர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

குழந்தைகள் நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “மத்திய அரசு, மாநில அரசு ஆகியவை பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டங்களில் குழந்தைகள் நல அமைப்பு கலெக்டரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மாவட்ட சமூக நல துறை, குழந்தைகள் நல குழுமம், சைல்டுலைன் (1098), காவல்துறையில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்ததடுப்பு பிரிவு ஆகியவை குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்திவருகிறது.

தண்டனை தீர்வாகாது

இந்த பிரிவுகள் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தல், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குழந்தைகள் ஆகியோரை மீட்டு பாதுகாப்பு அளிப்பதை உறுதிபடுத்துகிறது. ஆனால் இதையும் மீறி குழந்தைகளுக்கான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு வருமுன் காப்போம் என்பதுதான் காலச்சிறந்தது. ஏனெனில் குற்றங்கள் நடப்பதற்கு முன் அது தடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பெற்றோர் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள் மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. மத்திய அரசு அனுப்பிய பட்டியலில் சென்னையிலும் தமிழகத்திலும் அதிகளவில் சிறார் வதை வீடியோக்களைப் பார்ப்பதாக தகவல் உள்ளது. இந்த மனநிலை மாறினால் மட்டுமே பெண் குழந்தைகளை பாதுகாக்க முடியும். போக்சோ சட்டத்திலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வழக்கிலும் கைது செய்யப்படுபவர்களுக்கு தண்டனை மட்டும் தீர்வாகாது. அவர்களுக்கு தேவையான கவுன்சலிங் கொடுக்கப்பட வேண்டும்.


சென்னை அயனாவரம் சிறுமி வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. ஆயுள் முழுவதும் சிறை தண்டனை முதல் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களை விட பாலியல் வன்கொடுமையால் சிறுமிகள் கொலை செய்யப்படுவது வேதனைக்குரியது. இந்த நிலை மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.