×

நவராத்திரி ஆறாம் நாள்: கல்யாண கனவை நிவர்த்தியாக்கும் காத்யாயினி!

உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரி. சர்வ வல்லமை படைத்த பராசக்தியே அண்டசராசரத்துக்கும் தலைவியாவாள். இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம்” என்றால் உலகம். “சரம்” என்றால் அசைகின்ற பொருட்கள். “அசரம்” என்றால் அசையாத பொருட்கள். ஆம்.. அன்னை ஆதிபராசக்தியே, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்கள் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி புரிகிறாள். நவராத்திரி விழாவின் ஆறாம் நாளில் துர்க்கையை காத்யாயனி என்று ஆராதனை செய்வர். உலகாளும் அன்னை தன்
 

உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரி. சர்வ வல்லமை படைத்த பராசக்தியே அண்டசராசரத்துக்கும் தலைவியாவாள். இதை அண்டம்+ சரம்+அசரம் என்று பிரிக்க வேண்டும். “அண்டம்” என்றால் உலகம். “சரம்” என்றால் அசைகின்ற பொருட்கள். “அசரம்” என்றால் அசையாத பொருட்கள். ஆம்.. அன்னை ஆதிபராசக்தியே, இந்த உலகிலுள்ள அசைகின்ற, அசையாப் பொருட்கள் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து அருளாட்சி புரிகிறாள்.

நவராத்திரி விழாவின் ஆறாம் நாளில் துர்க்கையை காத்யாயனி என்று ஆராதனை செய்வர். உலகாளும் அன்னை தன் மகளாய்ப் பிறக்கவேண்டும் எனவேண்டினார் காத்யாயன மாமுனிவர். அவர் எண்ணம் ஈடேற அவர் மகளாய்ப் பூவுலகில் அவதரித்தாள் அன்னை. காத்யாயன மாமுனியின் மகள் என்பதால் காத்யாயினி என வழங்கப் படுகின்றாள். இவளையே மகிஷாசுர மர்த்தினி என்றும் கூறுவர்.
கோகுலத்து கோபியர்கள் கண்ணனை அடைய இவளையே தெய்வமாய் வழிபட்டு விரதம் இருந்தனர் என்பார்கள். கன்னியர் மனம் விரும்பும் படி, மணாளனை அளித்துக் கல்யாணப் பேறு அளிப்பாள் இவள் என்று கூறுவார்கள்.

“காத்யாயினி மஹாமாயே மகாயோகிந் யதீஸ்வரி
நந்தகோப ஸுதம் தேவி பதிம்மே குருதே நமஹ”

என்ற இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் பண்ணும் கன்னியர்கள் தங்கள் மனசுக்கு பிடித்த கணவனை விரைவில் கைபிடிப்பார்கள் என்பது உறுதி.

தேவி காத்யாயினியை மகள் வடிவமாக வணங்குகின்றனர். இவளுக்கு அன்பு அதிகம். அதேபோல், தீய சக்திகளை வேரோடு அழித்து, பாவம் செய்பவரையும், அரக்க சக்திகளையும் கொல்பவள். இவளின் கருணை துயர்களை ஓடச் செய்வதோடு, கணவன் மனைவி இடையில் அடிக்கடி ஏற்படும் மனக்கசப்புகள் நீக்குவாள். அமைதியையும், செல்வத்தையும் தழைத்துச் செய்வாள். காளிகா புராணத்தில் இந்த தேவியைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது. வலிமையின் கடவுளாக உள்ள தேவி காத்யாயனி நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் தாமரை மலர் ஏந்தியும், மறு கரம் ஒளி வீசும் வாள் ஏந்தியும், இரண்டு கைகள் பக்தருக்கு அபயம் தரும் விதத்தில் காட்சியளிக்கிறாள். ஆண்டாள் வழிபட்ட தேவியாவாள். நங்கையரின் நலன் காப்பவள்.

நவராத்திரியின் ஆறாம் நாளில் ஏழு வயதுள்ள பெண்குழந்தைகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டுக்கு அழைத்து, அவர்களை ‘காளிகா’ தேவியாக வழிபடவேண்டும். பருப்பைக் கொண்டு பாவைகள் அலங்காரமாக “காளிகா தேவி”யையோ, அல்லது தேவி நாமத்தையோ கோலமாக போட்டு, குங்குமம் பொட்டு வைத்து, செவ்வரளிப் பூ, செம்பருத்தி பூ போன்ற சிவந்த மலர்களால் அலங்கரித்து, தும்பை பூ இலையால் அர்ச்சனை செய்து, நைவேத்தியமாக ஆரஞ்சு பழம், கடலைப்பருப்பு சுண்டல், தேங்காய் சாதம் படைத்து பூஜிக்க வேண்டும். மந்திரம் – ஓம் காத்யாயன்யை நம:
யோகிகள் இவள் அருளை துணை கொண்டு ஆறாம் சக்ரமான ‘ஆக்ன்யா’ சக்ரத்தை அடைவர். இந்த சக்ரத்தை முக்கண் சக்கரம் என்று கூறுவர். இவளின் தியான மந்திரம் :

“சந்திர ஹசூஜ் வல்கார லவர் வாஹன் காத்யாயனி சுப் தத்யா தேவி தவன் தாதினி”

ஒளி வீசும் (ஹசூஜ்) வாளைக் கொண்டவளும், கம்பீரமான சிம்மத்தில் ஏறி தீய சக்திகளை அழிப்பவளாம் அன்னை காத்யாயனி எனக்கு அருள் செய்ய வேண்டும். இன்று நாம் அம்பிகையை வழிபடுவதால், எதிரிகளின் தொல்லை முழுமையாக விலகி, வாழ்க்கையில் என்றும் சந்தோஷத்தை நிலைக்கசெய்வாள் தேவி. ஓம் சக்தி! ஓம் பராசக்தி!! ஓம் ஆதிபராசக்தி!!!

-வித்யா ராஜா