×

கட்சி அனுமதித்தால் கன்னியாகுமரியில் போட்டியிட தயார்! – பொன்னாரை சீண்டிய நயினார் பேட்டி

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிட தயார் என்று முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பா.ஜ.க-வின் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதற்கு முன்பு பல முறை பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் இருந்து வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
 


கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.வசந்தகுமார் காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிட தயார் என்று முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பா.ஜ.க-வின் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதற்கு முன்பு பல முறை பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் இருந்து வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது வசந்தகுமார் காலமான நிலையில், மீண்டும் அங்கு போட்டியிட பொன் ராதாகிருஷ்ணன் தயாராகி வருகிறார்.


இந்த நிலையில் பா.ஜ.க-வில் பதவி கிடைக்கவில்லை என்று அதிருப்தியில் உள்ள நயினார் நாகேந்திரனும் அந்த தொகுதிக்கு குறிவைத்திருப்பது தெரியவந்துள்ளது. பா.ஜ.க-வின் தென் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் நெல்லையில் நேற்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார். சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் வெற்றி பெறுவது பற்றிய ஆலோசனை என்று கூறப்பட்டாலும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பற்றியே அதிகம் பேசியதாக கூறப்படுகிறது.
பின்னர் கூட்டம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.க ஓட்டு சதவிகிதம் அதிகரித்துள்ளது. தற்போது அ.தி.மு.க கூட்டணியில் தொடர்கிறோம். தேர்தல் வரும்போதுதான் கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.


கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்கனவே பா.ஜ.க போட்டியிட்டது. எனவே, இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்டு வெற்றி பெறும். அந்த தொகுதியில் போட்டியிட ஏராளமான தலைவர்கள் உள்ளார்கள். கட்சி மேலிடம் வாய்ப்பு கொடுத்தால் நான் போட்டியிட தயாராக உள்ளேன்” என்றார்.
கன்னியாகுமரி தனக்குத்தான் என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்த பொன் ராதாகிருஷ்ணனுக்கு இந்த பேட்டி இடியாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. கன்னியாகுமரியைப் பொறுத்தவரைச் சாதி வாக்குகளே அங்கு வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதால் கட்சி மேலிடம் விபரீத முடிவை எடுக்காது என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.