×

குப்பைக் கிடங்கு அருகில் கிராம சேவை மையம் – சுகாதாரத் துறை கவனிக்குமா ?

உடல்நலப் பிரச்சினை என்றால் ஏழை மக்கள் நாடுவது, அரசு சுகாதார மையங்களைத்தான். வசதியானவர்கள் என்றால் தனியார் மருத்துவமனைக்குச் செல்வார்கள், அதுவே அன்றாட கூலி வேலை செய்யும் மக்கள் அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி உள்ளனர். அதனால்தான் அரசு மினி கிளினிக் போன்ற திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சென்னை நகரத்துக்குள் என்றால், அரசு மருத்துவமனைகளில் பல சிறப்பு வசதிகள் கிடைத்தாலும், புறநகர் பகுதிகளில் சுகாதார மையங்களே நோய் பரப்பும் கூடாரங்களாக உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக சமூக
 

உடல்நலப் பிரச்சினை என்றால் ஏழை மக்கள் நாடுவது, அரசு சுகாதார மையங்களைத்தான். வசதியானவர்கள் என்றால் தனியார் மருத்துவமனைக்குச் செல்வார்கள், அதுவே அன்றாட கூலி வேலை செய்யும் மக்கள் அரசு மருத்துவமனைகளைத்தான் நம்பி உள்ளனர். அதனால்தான் அரசு மினி கிளினிக் போன்ற திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சென்னை நகரத்துக்குள் என்றால், அரசு மருத்துவமனைகளில் பல சிறப்பு வசதிகள் கிடைத்தாலும், புறநகர் பகுதிகளில் சுகாதார மையங்களே நோய் பரப்பும் கூடாரங்களாக உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில், சுப்ரமணிய பாலாஜி என்பவர் ஒரு பதிவிட்டுள்ளார். சென்னை புறநகரான பெரும்பாக்கத்தில் வசித்து வரும் அவர், தனது மகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான அங்குள்ள சுகாதார மையத்துக்கு சென்றுள்ளார்.

ஆனால், அந்த சுகாதார மையம் அருகே, அந்த கிராமத்தின் குப்பை கிடங்கு உள்ளது. அதைச் சுற்றி மழை நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் வகையில் இருந்துள்ளது. அப்பகுதியின் கழிவுநீர், குப்பை கூளங்கள் என அந்த வளாகமே நோய்பரப்பும் என வகையில் இருந்துள்ளது.

குப்பைகளை அள்ள பயன்படும் குப்பைத் தொட்டிகளும் அந்த வளாகத்திலேயே கிடக்கின்றன. அதில் மழை நீர் தேங்கி , கொசுக்களை உற்பத்தி செய்யும் கூடாரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், மலேரியா, டெங்கு பரவும் அபாயமும் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம். இதை வீடியோவாக பதிவு செய்துதான் தனது பேஸ்புக் பக்கத்தில் சுப்ரமணிய பாலாஜி பகிர்ந்துள்ளார்.

சென்னையில் அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களை இடமாற்றம் செய்யம் அரசு, அவர்களை காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் , சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் குடியமர்த்துகிறது.

சென்னையின் மத்திய பகுதியில், வேலை வாய்ப்பு, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட வசதிகளுடன் வாழ்ந்த மக்களை, புறநகர்களில் குடியமர்த்தும் அரசு, அவர்களுக்கான அடிப்படை சுகாதார வசதியும் அந்த பகுதிகளில் உருவாக்கித் தர வேண்டும். கொரோனா தொற்று அச்சம் உள்ள காலத்தில், சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் வகையில், கிராம சுகாதார மையத்தை வைத்திருப்பது , அந்த மக்களை இரண்டாம்நிலை குடிமகன்களாக கருத வைப்பதாக அந்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.