×

ஆப்கான் பிரதமராகும் சர்வதேச பயங்கரவாதி… தற்காலிக அமைச்சர்களை நியமித்த தலிபான்கள்!

20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலை ஆக்கிரமித்து 3 வாரங்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் இன்னும் அவர்கள் ஆட்சியமைக்கவில்லை. பெருந்தலைகளுக்குள் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதால் இந்தத் தாமதம் என சொல்லப்படுகிறது. ஆனால் தலிபான்கள் தரப்போ அதனை திட்டவட்டமாக மறுத்து, ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவிட்டதாகவும் சிறு, சிறு பணிகள் மட்டுமே பாக்கி உள்ளதாக தெரிவிக்கிறது. தலிபான்களில் பல குழுவினர் இருக்கின்றனர். அவர்களில் ஹக்கானி குழுவினர் தங்களுக்கு அதிகாரமிக்க பதவி வேண்டும்
 

20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலை ஆக்கிரமித்து 3 வாரங்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் இன்னும் அவர்கள் ஆட்சியமைக்கவில்லை. பெருந்தலைகளுக்குள் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதால் இந்தத் தாமதம் என சொல்லப்படுகிறது. ஆனால் தலிபான்கள் தரப்போ அதனை திட்டவட்டமாக மறுத்து, ஆட்சி அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துவிட்டதாகவும் சிறு, சிறு பணிகள் மட்டுமே பாக்கி உள்ளதாக தெரிவிக்கிறது.

முல்லா ஹசன் அகுந்த்

தலிபான்களில் பல குழுவினர் இருக்கின்றனர். அவர்களில் ஹக்கானி குழுவினர் தங்களுக்கு அதிகாரமிக்க பதவி வேண்டும் என்றார்கள். அதற்கு தலிபான்கள் அமைப்பை நிறுவியர்களில் ஒருவரான முல்லா பரதார் மறுத்து வந்தார். இதனிடையே தலிபான்களை உருவாக்கிய மிக முக்கிய தலைவரான முல்லா ஓமரின் மகன் முல்லா யாகூப்பும் கொடி பிடித்தார். தலிபான்களின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட தலைமை நிர்வாக கவுன்சிலில் தலைவரான முல்லா ஹசன் அகுந்த்தும் இந்த ரேஸில் இணைந்தார். அகப்படாதவன் கையில் அதிகாரம் கிடைத்தது போல் அதிகார மோதல் நிலவி வந்தது.

முல்லா பரதார்

இச்சூழலில் தேவைப்படும் துறைகளுக்கு மட்டும் அமைச்சர்களையும் புதிய பிரதமரையும் தலிபான்கள் அறிவித்துள்ளனர். புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஐநாவின் சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் இருக்கிறார். இவரைத் தேர்ந்தெடுக்க இரண்டே காரணங்கள் தான். ஒன்று அவர் ராணுவத்தை விடுத்து முழுமையான மத பின்னணி கொண்ட மத தலைவர் போன்றவர். இரண்டாவது அவர் தலிபான்களின் சொர்க்கபுரியான கந்தஹாரின் புதல்வர்.

சிராஜ் ஹக்கானி

ஈரானை போல ஒரு மதத் தலைவர் தான் ஆப்கானிஸ்தானை வழிநடத்த வேண்டும் என தலிபான்கள் நினைத்ததால் இவரை டிக் அடித்தனர். பிரச்சினைகள் செய்த ஹக்கானி குழுவின் தலைவர் சிராஜ் ஹக்கானிக்கு அதிகாரமிக்க உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு சரிக்கட்டப்பட்டுள்ளது. இவர் அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதேபோல மற்றொரு தலைக்கட்டான முல்லா ஓமரின் மகன் முல்லா யாகூப்புக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லா பரதார், மவுல்வி ஹவி ஹனாவி ஆகிய இருவரும் துணை பிரதமர்களாக செயல்படுவார்கள்.

முல்லா ஹசன் அகுந்த்

மவுல்வி அமீர் கானுக்கு வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அரசு தற்காலிகமானது தான் என்றும், மிக அவசியமாக தேவைப்படும் துறைகளுக்கான அமைச்சர்கள் மட்டும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற துறைகளுக்கான அமைச்சர்கள் பின் அறிவிக்கப்படுவர் எனவும் தலிபான்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் தலிபான்கள் மறுத்தாலும் அவர்களுக்குள் அதிகார மோதல் இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இன்னும் பல்வேறு துறைகளுக்கு யாரையும் நியமிக்காமல் இருப்பதே அதற்குச் சாட்சி.