×

உயிர் காக்கும் மருந்து பற்றாக்குறை… 1200 கி.மீ பயணம் செய்து மருந்து வாங்கி வந்து தந்தையின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்!

சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று மருந்து வாங்கி வந்து தந்தையின் உயிரை இளைஞர் ஒருவர் காப்பாற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசர தேவைக்கு பயன்படும் மருந்துகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் ஜோல் பின்டோ (28) . இவருடைய தந்தைக்கு நுரையீரல் பிரச்னை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக டோசிலிசுமாப் என்ற மருந்து வேண்டும்… ஆனால் தற்போது மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை என்று டாக்டர்கள்
 

சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு சென்று மருந்து வாங்கி வந்து தந்தையின் உயிரை இளைஞர் ஒருவர் காப்பாற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசர தேவைக்கு பயன்படும் மருந்துகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் ஜோல் பின்டோ (28) . இவருடைய தந்தைக்கு நுரையீரல் பிரச்னை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக டோசிலிசுமாப் என்ற மருந்து வேண்டும்… ஆனால் தற்போது மருத்துவமனையில் ஸ்டாக் இல்லை என்று டாக்டர்கள் கை விரித்துள்ளனர். மருந்து வர இரண்டு நாட்கள் ஆகும். அதுவரை அவரை கவனமாக பார்க்க வேண்டும், உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சென்னையில் பல மருந்தகங்கள், ஸ்டாக்கிஸ்டுகளை விசாரித்தபோதும் அந்த மருந்து கிடைக்கவில்லை. அந்த மருந்தின் விலை 75 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரை விற்பனையாவது தெரிந்தது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என அண்டை மாநிலங்களில் எங்காவது கிடைக்கிறதா என்று பார்த்தபோது, ஐதராபாத்தில் இருப்பது தெரியவந்தது.


அங்குள்ள மருந்தாளுநர்களிடம் கேட்டபோது கொரியர் செய்தால் கூட வர இரண்டு நாட்கள் ஆகிவிடும் என்று கூறியுள்ளனர். இதனால் கடந்த திங்கட்கிழமை மாலை இ-பாஸ் வாங்கிக்கொண்டு தன்னுடைய காரிலேயே 630 கி.மீ தூரத்துக்கு பயணம் செய்து ஐதராபாத்தை அடைந்தார். அங்கு மருந்தை வாங்கிக்கொண்டு உடனடியாக சென்னை திரும்பினார். மீண்டும் 630 கி.மீ தூரம் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் மருத்துவமனையை அடைந்து அந்த மருந்தைக் கொடுத்துள்ளார்.
உயிர் காக்கும் மருந்தை செலுத்திய பிறகு ஜோல் பின்டோவின் தந்தையின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய தந்தையின் உயிரைக் காக்க ஐதராபாத் வரை விரைவாக சென்று வந்த இளைஞருக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மறைந்த தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கூட உயிர் காக்கும் மருந்தை ஐதராபாத்தில் இருந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை தான் அனுப்பிவைத்தார். தமிழகத்தில் அந்த மருந்து இல்லாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர் வழங்கினார். தமிழகத்தில் உயிர்காக்கும் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிளும் உடனடியாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.