×

“சத்தியமூர்த்தி பவனில் ஸ்டாலின்”… டிவியை பார்த்து நிகழ்ச்சியை தெரிந்து கொண்டதாக குஷ்பு வருத்தம்!

சத்தியமூர்த்தி பவனில் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கடந்த 28 ஆம் தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சாதாரண குடும்பத்திலிருந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா என 82 வசந்தன்&கோ நிறுவனங்களை நிறுவி புகழின் உச்சத்தில் இருந்த போதிலும் அவரின் எளிமை பண்பு சற்றும்
 

சத்தியமூர்த்தி பவனில் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து குஷ்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கடந்த 28 ஆம் தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சாதாரண குடும்பத்திலிருந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா என 82 வசந்தன்&கோ நிறுவனங்களை நிறுவி புகழின் உச்சத்தில் இருந்த போதிலும் அவரின் எளிமை பண்பு சற்றும் மாறவில்லை என சிலாகிக்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

வசந்தகுமாரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள தோட்டத்தில் அவரின் தாய் தந்தை நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே வசந்தகுமாரின் உடலுக்கு சத்தியமூர்த்தி பவனில் வைத்து அஞ்சலி செலுத்த மு.க. ஸ்டாலின் வருகை புரிவதாக இருந்தார். ஆனால் நேரமில்லாததால் வசந்தகுமாரின் உடல் சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படாமல் நேராக காமராஜர் அரங்கம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவரின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் திருவுருவப்படம் திறக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த மு க ஸ்டாலின் எம்பி வசந்தகுமாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அந்த நிகழ்வில் எம்பி கனிமொழி, டி ஆர் பாலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர்.

இதுகுறித்து நடிகையும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில், ” தமிழகத்தில் இருக்கும் ஒரே தேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான தனக்கு நிகழ்ச்சி பற்றி தகவல் இல்லை. சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியை ஊடகங்களில் பார்த்து தெரிந்து கொண்டடேன். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டுமே தவிர ஈகோவால் பலவீனப் படுத்தக் கூடாது ” என்று காட்டமாக அவர் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் குஷ்பு புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கருத்து கூறிய நிலையில் கட்சி மேலிடத்திற்கும் குஷ்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.