×

கல்லால் அடித்தவருக்கு கைலாய பதவியளித்த ஈசன்… சாக்கியநாயனார் வரலாறு !

இறைவனை வழிபட விரும்பினால் மந்திரங்கள், பக்திப் பாடல்கள் கொண்டும், பூக்களைக் கொண்டும் வழிபடுவது வழக்கம். ஆனால் ஒருவர் இறைவன் மீது கல்லெறிந்து வழிபட்டார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படியும் ஒருவர் வழிபட்டார். அவருக்கும் ஈசன் அருள் புரிந்தான். கல்லால் அடித்தவருக்கு கயிலாய பதவியையும் கொடுத்து, 63 நாயன்மார்களில் ஒருவருவராகவும் உயர்த்தினார் ஈசன். ஈசனின் திருவுருவான சிவ லிங்கத்தின் மீது கல் எறிவதையே வழிபடாய் கொண்ட அந்த நாயனார் பெயர் சாக்கியநாயனார். சைவம் போற்றும் பெரியபுராண நாயகர்கள்
 

இறைவனை வழிபட விரும்பினால் மந்திரங்கள், பக்திப் பாடல்கள் கொண்டும், பூக்களைக் கொண்டும் வழிபடுவது வழக்கம். ஆனால் ஒருவர் இறைவன் மீது கல்லெறிந்து வழிபட்டார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அப்படியும் ஒருவர் வழிபட்டார். அவருக்கும் ஈசன் அருள் புரிந்தான். கல்லால் அடித்தவருக்கு கயிலாய பதவியையும் கொடுத்து, 63 நாயன்மார்களில் ஒருவருவராகவும் உயர்த்தினார் ஈசன். ஈசனின் திருவுருவான சிவ லிங்கத்தின் மீது கல் எறிவதையே வழிபடாய் கொண்ட அந்த நாயனார் பெயர் சாக்கியநாயனார்.

சைவம் போற்றும் பெரியபுராண நாயகர்கள் திருத்தொண்டர்கள் 63 நாயன்மார்களில் புத்த மதத்தைச் சேர்ந்த ஒரே அடியார் சாக்கியர் மட்டுமே. அவருக்கும் அன்பு காட்டி அருள் வழங்கி இறைவன் தன் திருவிளையாடலை நிகழ்த்திய திருதலம், காஞ்சீபுரத்தில் அருகில் உள்ள திருசங்கமங்கை வீரட்டானேஸ்வரர்திருக்கோவிலாகும்.

இத்தலத்து இறைவனை, திருமால் வழிபட்டு தனது பச்சை நிறம் நீங்கிப் பவள நிறம் பெற்றார் என்று காஞ்சிப்புராணம் கூறுகிறது. பல்வேறு சித்தர்களும், முனிவர்களும் இத்தலத்து இறைவனை வழிபட்டு வீடுபேறு பெற்றுள்ளனர். அவர்களுள் கொங்கண முனிவரும் ஒருவர். இறைவனின் திருமேனி புகழை உலகுக்கு உணர்த்த நினைத்த கொங்கண முனிவர், இறைவனையே சோதிக்க நினைத்தார். கொங்கண முனிவரிடம் ஒரு குளிகை இருந்தது. அதனை எதன் மீது வைத்தாலும், அதனை நீராக்கிவிடும் சக்தி கொண்டது. கொங்கணர் அந்த குளிகையை சிவலிங்கத்தின் மீது வைத்து சோதித்தார். நீராக மாறுவதற்குப் பதிலாக குளிகையை சிவலிங்கம் உள்ளே இழுத்துக் கொண்டது. இதனைக் கண்டு வியப்புற்ற கொங்கண முனிவர் சிவலிங்கத்தின் பெருமையைப் புரிந்து கொண்டு அங்கேயே தங்கி தவம் செய்து பேறு பெற்றார். இப்படிப் பல்வேறு பெருமைகளை கொண்டது காஞ்சிபுரம்- திருசங்கமங்கை வீரட்டானேசுவரர் திருக்கோவில்.

தொண்டைவள நாட்டு திருச்சங்கமங்கை எனும் திருத்தலத்தில் பிறந்த சாக்கியர், காஞ்சீபுரம் சென்று ஞானம் பெறுவதற்குரிய வழிகள் பலவற்றையும் ஆராய்ந்தார். அந்நாளில் காஞ்சி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த சாக்கிய சமயம் எனப்படும் புத்த மத பாடசாலையில் சேர்ந்தார். பௌத்தகருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அந்த மதத்திலேயே சேர்ந்துவிட்டார் . ஆனாலும் அவர் மனம் அமைதி பெறவில்லை. செய்வினை, செய்பவன், வினையின் பயன், அதனைக் கொடுப்பவன் என்ற 4 – ஐயும் ஏற்றுக் கொள்கின்ற இயல்பு சைவம் ஒன்றுக்கே உள்ளது என்பதை உணர்ந்தார். புத்தமதத்தினராய் துவராடைபூண்டு பிட்சு வேடம் பூண்டிருந்தாலும் அவர் மனம் சிவன்பால் நாட்டம் கொண்டிருந்தது.

“எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும்
மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள் என்றே
துன்னியவே டந்தன்னைத் துறவாதே தூயசிவந்
தன்னை மிகும் அன்பினால் அறவாமை தலைநிற்பார்” – என்ற பெரியபுராண கருத்திற்கிணங்க, புறத்தில் புத்த மதத்திற்குரிய காவி உடையை விட்டு விடாமல், அகத்தில் சிவனடியாராக வாழத் தொடங்கினார் சாக்கியர் . ஒருமுறை அவர் கண்ணில் பட்ட சிவலிங்கத்தை எங்ஙனம் வணங்குவது என்றியாமல் அதன் மீது அருகில் கிடந்த கல்லை தூக்கி அடித்தார் . முதன் முறையாகச் சிவன் மீது கல்லெறிவதற்குக் காரணமாக அமைந்தது அவரது உணர்வேயாகும். அவரது செயல் அவருக்கு மன நிறைவையும், அமைதியையும் தந்தது. எல்லை மீறிய ஈடுபாட்டால் அன்றாடம் கல்லெறியத் தொடங்கினார். மற்றவர்கள் இச்செயல் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட அவருக்குத் தோன்றவில்லை.

அவ்வாறு எறிகின்ற நேரத்தில் அவரது மனதில் தோன்றிய ஆனந்தம், இறைவனின் திருவருள் குறிப்பு என்று நினைத்த சாக்கியர், நாள்தோறும் சிவலிங்கத்தின் மீது கல்லெறிவதை ஒரு கடமையாகவே செய்துவந்தார். உணவு உண்ணும் முன் சிவலிங்கத்தின் மீது எப்போதும் கல்லெறிந்து விடுவார் . ஒருமுறை கல்லெறிய மறந்து உண்பதற்கு அமர்ந்தார். அப்போது திடீரென சிவபெருமான் மீது கல்லெறிய மறந்ததை நினைத்து, சாப்பிடாமல் எழுந்து ஓடிச் சென்று இறைவன் மீது கல்லெறியக் கையைத் தூக்கினார். அப்போது அவரைத் தடுத்தாட்கொண்ட இறைவன், அவருக்குக் காட்சி தந்து அவரைத் தன் அடியாராக ஏற்றுக் கொண்டார். அத்துடன் அவரைக் கயிலைக்கும் அழைத்துச் சென்றார் என்கிறது பெரிய புராணம் . அப்படி தன்மீது கல்லெறிந்த அடியார் மீதும் அன்புகாட்டிய ஈசன் விற்றிருக்கு திருத்தலம் தான் காஞ்சியை அடுத்த திருச்சங்கமங்கை . தற்போது கோனேரிகுப்பம் என்றழைக்கப்படுகிறது. பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த திருத்தலத்தில் விற்றிருந்து அருள்பாலிக்கும் ஈசன் திருநாமாம் வீரட்டானேசுவரர் . அழகிய திருக்கோலத்தில் மூலவர் வீரட்டானேசுவரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார் என்றாலும் சாக்கியநாயனாரிடம் கல் அடி பட்டவர் மூலவரின் பின்புறம் மதிற்சுவர் மாடத்தில் உள்ள ஆதிமூலவர் எனும் ஈசனே ஆவார் . அவர் மீது கல்லடி பட்டதற்கான ஏராளமான வடுக்கள் காணப்படுகின்றன .


ஆதிமூலவர் சன்னதிக்கு எதிரே சற்று தூரத்தில் வெகு எளிய உருவில் அழகிய சிலையாகச் சாக்கிய நாயனார் கையில் பெரிய கல்லைப் பிடித்துக் கொண்டு, இறைவன் மீது எறியும் கோலத்தில் இருக்கிறார். காஞ்சீபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சீபுரம் நகரிலுள்ள கோனேரிக்குப்பம் ரெயில்வே கேட்டுக்கு முன்னால், அப்பாராவ் தெருவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். புதிய ரயில் நிலையத்தில இறங்கி கிழக்கே 1 கிலோமீட்டர் சென்றாலும் அப்பாராவ் தெரு சென்று ஆலயத்தை அடையலாம்.
இறைவனை வழிபட வரைமுறை தேவையில்லை , விதிமுறைகள் வேண்டியதில்லை தூய அன்பும் உண்மையான பக்தியும் இருந்தால் போதும் ஈசனின் இறையடி நிழலில் நிச்சயம் இடம் பெறலாம் என்பதற்கு சாக்கிய நாயனார் சரிதம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

-மு.ரா.சுந்தரமூர்த்தி