×

“ஈசன் தனக்கு குருவாய் வந்து தீட்சை அளித்த” குரு பகவானின் அவதாரங்கள்!

‘தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே’ என்பது திருமூலர் மந்திரம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் திருப்புகழ் தந்த அருணகிரிநாதர். ஈசன் தனக்கு குருவாய் வந்து தீட்சை அளித்தார் என்பதை பாடி மகிழ்வார் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் . முருகப்பெருமானுக்கு குருசாமி, குருமூர்த்தி என்ற திருநாமங்களும் உண்டு. காரணம் முருகன் தனது தந்தை பிரணவ மந்திரத்தின் பொருள் உரைத்து
 

‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே’ என்பது திருமூலர் மந்திரம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பார் திருப்புகழ் தந்த அருணகிரிநாதர். ஈசன் தனக்கு குருவாய் வந்து தீட்சை அளித்தார் என்பதை பாடி மகிழ்வார் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் .

முருகப்பெருமானுக்கு குருசாமி, குருமூர்த்தி என்ற திருநாமங்களும் உண்டு. காரணம் முருகன் தனது தந்தை பிரணவ மந்திரத்தின் பொருள் உரைத்து தகப்பன்சாமி என்று வணங்கப்பட்டவர்.

வியாசர் ஜெயந்தியை குரு பூர்ணிமாவாக கொண்டாடுவது வழக்கம். வியாசரே நான்கு வேதங்களையும், 18 உபநிஷத்துக்களையும் தொகுத்ததோடு மகா காவியமான மாகபாரதத்தையும் எழுதி அருளினார். கிருஷ்ண பரமாத்ம உபதேசித்த பகவத் கீதையை மகாபாரதத்தில் வழங்கியவரும் வியாசர்தான். ஆகவே அவர் அரும்பெரும் குருவாக கொண்டாடப்படுகிறார்.

கிருஷ்ணருக்கு குருவாக வாய்த்தவர் சாந்தீபினி முனிவர் ஆவார். ராமபிரானின் குலகுரு விளங்கியவர் வசிஷ்டர் ஆவார். விஸ்வமித்திரர் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு இடையூறுகளை கடந்து கடும் தவம் செய்தார். விஸ்வமித்திரர் அருளிய ‘காயத்ரி மந்திரமே’ மந்திரங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது . குருமூலம் உபதேசமாகும் மந்திரங்களை நியமமாக உச்சிக்க அஷ்டமாசித்திகள் வைக்கும் என்பது நம்பிக்கை.

அசுரர்களின் குல குருவாக சுக்கிராச்சாரியாரும் தேவர்களின் குல குருவாக பிரகஸ்பதியும் கிரகாதிபதி அந்தஸ்து பெற்று விண்ணில் கோள்களாக நித்தியத்தும் பெற்று விளங்குகின்றனர். இவர்கள் முறையே சுக்கிரன் அல்லது வெள்ளி என்றும் குரு அல்லது வியாழன் என்றும் போற்றப்படுகின்றனர் .

வியாழக்கிழமையை குருவாரம் என்றும் அந்தநாளில் ராகவேந்திரர், சாயிபாபா , ரமணர், ராமலிங்கர், குமரகுருபரர், பாம்பன்சுவாமிகள் போன்ற மாகான்களை வழிபட சிறந்த நாள் என்றும் வகுத்துள்ளனர்.

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ . என குருவாழிபாடு செய்வது நலம் தரும் .

குரு மந்திரம் :
தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
குரும் காஞ்சன ஸந்நிபம்
புத்தி பூதம் திரிலோகேஸம்
தம் நமமி பிருகஸ்பதிம்

குரு பகவான் காயத்ரி :
வருஷபத் வஜாய வித்மஹே
க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
தந்நோ குரு ப்ரசோதயாத் . ஆகியனவும் குருவழிபாட்டுக்கு உகந்தன .

புத்த பூர்ணிமாவும் அதே தினத்தில் தான் வருகிறது . ஆண்டுதோறும் ஆடி மாத பௌர்ணமியே குரு பூர்ணிமா கொண்டாடப்படும். இவ்வாண்டு முன் கூட்டிய ஆனி மாத பௌர்ணமி குரு பூர்ணமாக வந்துள்ளது

ஆதி காலத்தில் எல்லா கலைகளையும் ஒரே குருவிடம் கற்க முடிந்தது. இந்நாளில் அப்படி இல்லை! ஒவ்வொரு கலைக்கும் ஒரு குரு என்றாகிவிட்டது. ஆனாலும், ஆன்மீக குருவையே முக்கிய குருவாக கொள்ளுதல் வழக்கத்தில் உள்ளது. அதற்கு காரணம் அன்றாட வாழ்க்கைக்கான கல்வியை விட ஆன்ம தாகத்திற்கான கல்வி ஆன்மிகத்தில் இருப்பது தான்.

என்ன தான் சகல செல்வங்களையும் வாரி குவித்த பின்பும் மனம் ஏதோ ஒரு ஏக்கத்தோடு தவிக்கிறது. அதைத் தீர்க்க குருவால் உதவ முடியும். ஆகவே அவர் முக்கியத்துவம் பெறுகிறார் . குரு கடவுளாக மதிக்கப்படுகிறார் .

சிவ மூர்த்தங்களில் தெட்சிணா மூர்த்தி கோலம் குருவாக போற்றப்படுகிறது . சனகாதி முனிவர்கள் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வருக்கும்
அவர் மவுன உபதேசம் செய்கிறார் .

‘கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்’ என்று திருவிளையாடற் புராணம் அருளிச்செய்த பரஞ்சோதி முனிவர் தெட்சிணாமூர்த்தியை போற்றுகிறார் .

வீடுபேறு அல்லது முக்தி நிலை என்பதை அடைய குருவின் உதவி அவசியமாகிறது . பரமாத்மாவை வலக்கையில் பிடித்திருக்கும் குரு இடக்கையால் சீடனை பற்றுகிறபோது நாம் பிறவிப் பயனை பரமானந்தத்தை சச்சிதானந்தத்தை நித்தியானந்தத்தை அடைய முடியும் .

குரு வாழ்க குருவே துணை. எல்லா குருமார்களுக்கும் நமஸ்காரம்.

– சுந்தரமூர்த்தி