×

‘தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதற்கான வசதிகள்’ ராமதாஸ் கோரிக்கை !

தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பொருளாதாரச் சூழல்களால் தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கலாம் என்றாலும் அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில்
 

தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. பொருளாதாரச் சூழல்களால் தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கலாம் என்றாலும் அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்றுவரை கட்டுக்குள் வரவில்லை. பல முறை உருமாறிய கொரோனா தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. முதல் அலை ஓய்ந்த பிறகு இயல்புநிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடப்பாண்டின் தொடக்கத்தில் இரண்டாம் அலை பரவி உச்சத்தை அடைந்திருக்கிறது. அடுத்த சில மாதங்களில் மூன்றாவது அலை தொடங்கும் என்ற அச்சம் நிலவும் சூழலில் ஏழை – நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் எப்போது சீரடையும் என்று தெரியவில்லை. ஏற்கனவே, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வரும் ஏழை மக்களால் உணவு உள்ளிட்ட தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் கல்விக் கட்டணத்தை செலுத்துவது கிஞ்சிற்றும் சாத்தியமற்றதாக மாறியிருக்கிறது.

தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி தொடர்ந்து படிக்க முடியாத நிலையில், அவர்களுக்கு அடுத்துள்ள வாய்ப்பு அரசு பள்ளிகளில் சேருவது தான். ஓரளவு வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி மாற்றுச் சான்றிதழ் பெற்று குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து விட்டுள்ளனர். ஆனால், தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அரசு பள்ளிகளிலும் சேர்க்க முடியாமல், தனியார் பள்ளிகளிலும் கல்வியைத் தொடர முடியாமல் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களில் பெரும்பான்மையான குழந்தைகள் வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தும் ஆபத்தும் உள்ளது.

உண்மையில், இத்தகைய குழந்தைகளும் எந்தத் தடையும் இல்லாமல் அரசு பள்ளிகளில் படிக்க அனைவருக்கும் கல்விச் சட்டத்தின்படி வகை செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்விச் சட்டத்தின்படி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதால், தனியார் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மாற்றுச்சான்றிதழ் இல்லாமலேயே அரசு பள்ளிகளில் அவர்கள் படிக்க வேண்டிய வகுப்பில் சேர்ந்து கொள்ள முடியும். மாணவர் சேர்க்கையின் போது அவர்கள் ஆதார் எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. தமிழக அரசின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் (Educational Management Information System) அனைத்து மாணவர்களைப் பற்றிய தகவல்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்தத் தகவல்கள் மாணவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதால், ஆதார் எண் மூலம் மாணவர்களின் கல்வி சார்ந்த தகவல்களை எளிதாக பெற முடியும். அவற்றைக் கொண்டு மாணவர்களுக்கு அரசு பள்ளிகளே புதிய மாற்றுச்சான்றிதழை உருவாக்கி விட முடியும். இந்த வசதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, அது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. வெகுசில இடங்களில் ஆசிரியர்களுக்கும் கூட இந்த வசதி பற்றி தெரியவில்லை. அதனால் பல மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் படிப்பை பாதியில் விடுகின்றனர். இது தடுக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு அரசு பள்ளி சார்பிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் ஒலிப்பெருக்கி கட்டி, இந்த வசதி குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி வசதியில்லாத மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிக்க விரும்பினால், அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட வேண்டும். அவர்களிடம் கட்டணத்தை பின்னாளில் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கலாம். மொத்தத்தில் பொருளாதார நெருக்கடியால் எந்த குழந்தையின் கல்வியும் தடைபடாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.