×

இளம் தலைமுறையை ஈர்க்கும் Handloom cafe… கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சி!

கோ- ஆப்டெக்ஸ் அரசு நிறுவனம் என்றாலே, புதுமையான முயற்சிகள் இருக்காது என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், நேரடி வர்த்தகப் போட்டியில் இருக்கும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. அரசின் ஒத்துழைப்பும், கைத்தறி நெசவாளர்களின் அர்ப்பணிப்பும், கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தை தனியார் பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு இணையாக இன்றளவும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. களத்தில் புதுப்புது போட்டியாளர்கள் வந்தாலும், புத்தம் புதிய டிசைன்கள், பெண்களின் மனதை மயக்கும் வண்ணக்கலவைகள், ஆண்டாண்டு காலம் நீடிக்கும்
 

கோ- ஆப்டெக்ஸ்

அரசு நிறுவனம் என்றாலே, புதுமையான முயற்சிகள் இருக்காது என்ற எண்ணத்தை மாற்றும் வகையில், நேரடி வர்த்தகப் போட்டியில் இருக்கும் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் காலம் தோறும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. அரசின் ஒத்துழைப்பும், கைத்தறி நெசவாளர்களின் அர்ப்பணிப்பும், கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தை தனியார் பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு இணையாக இன்றளவும் வளர்த்துக் கொண்டிருக்கிறது.
களத்தில் புதுப்புது போட்டியாளர்கள் வந்தாலும், புத்தம் புதிய டிசைன்கள், பெண்களின் மனதை மயக்கும் வண்ணக்கலவைகள், ஆண்டாண்டு காலம் நீடிக்கும் தரம் என கோ ஆப்டெக்ஸ் கொண்டுள்ள பந்தம் சொற்களில் அளக்கவியலாத நம்பிக்கையின் அறுபடாத இழைகளாக நீடிக்கிறது.

ஹேண்ட்லூம் கஃபே

புதிய முயற்சிகளின் தொடர்ச்சியாக கோ ஆப்டெக்ஸ் நிறுவனம், எழும்பூர் விற்பனையக வளாகத்தில் தொடங்கியுள்ளது தான் ஹேண்ட்லூம் கஃபே. கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இதற்கு முன்னர் இருந்த இயக்குநர்கள், பல முயற்சிகளை எடுத்திருந்தாலும், தற்போதையை இயக்குநர் டி.என்.வெங்கடேஷ் எடுத்துள்ள இந்த முயற்சி வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய நேசத்தை ஏற்படுத்தும் உணர்வுபூர்வமான முயற்சி என்றே சொல்லலாம்.

ரிலாக்ஷ் பாயிண்ட்

சமகாலத்தில் வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவம், விற்பது வாங்குவது என்பதைத் தாண்டி ஷாப்பிங் செய்வதுகூட குடும்பங்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஒரு ரிலாக்ஷ் பாயிண்ட் ஆகவும் இந்த ஹேண்ட்லூம் கபே வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பம் குடும்பமாக வரும் வாடிக்கையாளர்களில் குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கும் ஷாப்பிங் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சிறந்த உணவு வகைகளுடன், ரிலாக்ஸாக அமர்ந்து கதையளக்க, இந்த இடம் ஏற்றதாக இருக்கும்.

 

கைத்தறி அலங்காரம்

கைத்தறி தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அத்தனை நுட்பங்களும் இந்த கஃபேவில் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹேண்ட்லூம் கஃபே நுழைவு வாசலில், மின் விளக்கு அலங்காரத்துடன் அமைக்கப்பட்டுள்ள முகப்பு பெயர்பலகையே கலையும், புதுமையும் இணையும் சங்கமத்தை முன் அறிவிக்கிறது.

பட்டுப்புடவை டிசைன்கள்

பட்டுப்புடவைகளில் கலை நயம் குறித்து அறிந்தவர்கள் சுற்றிலும் ஒரு நோட்டம் விடலாம். அல்லது பட்டுப்புடவைகளில் உள்ள கலைப் படைப்புகளை தெரிந்து கொள்வதற்காகவும் நோட்டம் விடலாம். புடவைகளில் உள்ள டிசைன்களை கஃபேவுக்குள் வடிவமைத்துள்ளனர். மாங்காய், வங்கி, சலங்கை, தாழம்பு என ஒவ்வொரு டிசைனும் அழகான ஒளி அனுபவத்தை தருகின்றன. அமரும் இருக்கைகளிலும் கலை நயம் தெரிய வேண்டும் என்பதற்காக டேபிளில் தாழம்பு டிசைன் பளபளவென மினுக்கிறது..

 

ஊடு பாவு மின் விளக்குகள்

தலைக்கு மேலே மின் விளக்குகள் அலங்காரத்தை உற்று நோக்குபவர்கள் என்ன அது என ஆச்சர்யப்படுவர்கள். தறியில் நூல் நூற்கும் பாவு கருவிபோல மின் விளக்கு அலங்காரம் நிச்சயம் காண்போரை ஈர்க்கும். கைத்தறியோ, பட்டுப்புடவையோ விலை அதிகமாக இருக்கிறது என நினைப்பவர்கள், அதன் பின்னால் உள்ள உழைப்பை அறிவதில்லை என நெசவாளர்களுக்கு நீண்ட நாள் ஆதங்கம் இருந்து வருகிறது. இங்கு வந்தால் அந்த மனப்பான்மை மாறி விடும்.

தறி நெய்தல்

நட்ட நடுநாயகமாக தறி அமைக்கப்பட்டு புடவை நெய்து கொண்டிருக்கிறார்கள் இரண்டு நெசவாளர்கள். நிஜமான தறி… நூல் கோர்க்கப்பட்டு, நமது கண் முன்னே புடவை தயாராகிறது. புடவையின் ஒவ்வொரு இழைகளையும் ஒரு தொழிலாளி பார்த்து பார்த்து செய்வதற்கு பின்னுள்ள உழைப்பை அறிவதன் மூலம், இளைய தலைமுறைக்கு ஒரு உழைப்பின் அறிமுகத்தை ஏற்படுத்த முடியும்.

வெளிநபர்களுக்கும் அனுமதி

கோ ஆப்டெக்ஸ் வளாகத்தில் விசாலாமான கார் பார்க்கிங் வசதியும் உள்ளதால், வாடிக்கையாளர்கள் எந்த இடையூறும் இன்றி வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தனை வசதிகளுடன் இந்த ஹேண்ட்லூம் கஃபே- கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள் என நினைக்கத் தேவையில்லை என்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். இந்த பாரம்பரியம் நமது அடுத்த தலமுறைக்கு செல்ல வேண்டும் என இந்த புதிய முயற்சிக்கு பலரும் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறார். அருகில் உள்ள கல்லூரி மாணவிகள் இந்த கபே வுக்கு வரத் தொடங்கினாலே, கோ-ஆப்டெக்ஸ் ஹேண்ட்லூம் கஃபேவும் வண்ணங்களால் களை கட்டத் தொடங்கும்.