நீட் தேர்வையும் ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது போல நீட் தேர்வையும் ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இன்னும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படவில்லை. மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில் மார்ச் மாதத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கப்பட்டாலும் கூட, மார்ச் 19 முதல் 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கு என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ, அந்த காரணங்கள் அனைத்தும் ஜூலை 26-ம் தேதி நடைபெறவிருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் பொருந்தும். ஜூலை மாதம் 15ம் தேதி வரை சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகளை நடத்த முடியாது எனும் போது, அடுத்த 10 நாட்களில் நீட் தேர்வை மட்டும் எப்படி நடத்த முடியும்? இடைப்பட்ட காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் எந்த அதிசயமும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
நீட் தேர்வு மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வது சாத்தியமற்றது; வேண்டுமானால் நிலைமை சீரடையும் வரை இத்தகைய தேர்வுகளை ஒத்திவைத்து, கொரோனா அச்சம் விலகிய பிறகு நடத்திக் கொள்ளலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வரும் அக்டோபர் & நவம்பர் மாதங்களில் தான் உச்சத்தை அடையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. அதன்பின் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலைமை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதற்குள் நடப்புக் கல்வியாண்டு முடிவுக்கு வந்து விடும். அதன்பின் அடுத்த ஆண்டுக்கான தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்ற பணிகள் வந்து விடும். நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஓராண்டுக்கு ஒத்திவைப்பது எந்த வகையிலும் சரியானதாக இருக்காது.
இதற்கெல்லாம் மேலாக, மாணவர்களின் தகுதியையும், திறமையையும் நீட் தேர்வு துல்லியமாக எடை போடுகிறது என்பது கடந்த 4 ஆண்டுகளில் நிரூபிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வி வணிகமயமாவதும் தடுக்கப்படவில்லை; தகுதியும், திறமையும் கொண்டவர்கள் பணம் இல்லாததால் மருத்துவக் கல்வியில் இடம் வழங்காமல் புறக்கணிக்கப்படும் அவலமும் மாறவில்லை. இந்த அவலங்களுடன் ஒப்பிடும் போது, 12ம் வகுப்பு மதிப்பெண்களின்படி மாணவர் சேர்க்கையை நடத்துவது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் குறைத்து விடாது. எனவே நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.