×

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை இன்று கோலாகலமாக நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் ராம பிரான் குறித்த சிந்தனை சில !

மகா விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் அதிக ஆகர்ஷம் மிக்கது ராமாவதாரம் . பிற அவதாரங்களை விட ராமருக்கு அதிக அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன . எல்லா ஊர்களில் கிராமங்கள் நகரங்கள் என்ற பேதமின்றி எங்கும் ராம பஜனை மடங்கள் நிறைந்துள்ளன . ராமபிரான் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல தெற்காசியாவில், நேபாளம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா , பாலி என உலக நாடுகள் பலவற்றிலும் ராமாயணமும் ராமரும் போற்றி வணங்கப்படுகிறார் . ஒரு அவதார
 

மகா விஷ்ணு எடுத்த 10 அவதாரங்களில் அதிக ஆகர்ஷம் மிக்கது ராமாவதாரம் . பிற அவதாரங்களை விட ராமருக்கு அதிக அளவில் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன . எல்லா ஊர்களில் கிராமங்கள் நகரங்கள் என்ற பேதமின்றி எங்கும் ராம பஜனை மடங்கள் நிறைந்துள்ளன .

ராமபிரான் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல தெற்காசியாவில், நேபாளம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா , பாலி என உலக நாடுகள் பலவற்றிலும் ராமாயணமும் ராமரும் போற்றி வணங்கப்படுகிறார் .

ஒரு அவதார புருஷராக இருந்த போதிலும் மனித பிறவிக்குண்டான சங்கடங்கள் அனைத்தையும் சந்தித்தவர் ராமபிரான் . அவரது வீரதீர பராக்கிரமங்கள் சொல்லிமாளாது . ஏக பத்தினி விரதன் என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் . கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கினாலும் ராமர் அவதரித்தது திரேதா யுகத்தில் . ராம என்ற இரண்டு எழுத்து வாழ்வின் தலை எழுத்தையே மாற்றும் ஆற்றல் மிக்கது . வேடனாய் இருந்த வால்மீகியை ரிஷியாக்கியது அந்த இரண்டு எழுத்து தான் . வால்மீகி வாழ்வில் மட்டுமல்ல எல்லோர் வாழ்விலும் மாற்றத்தை அளிக்கவல்லது ராம நாமம் .

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சன்மும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமா என்ற இரண்டெழுத்தினால் – என்கிறார் கம்பர் .

ராமநாமத்தை உச்சரிப்பதால் நலன்களும், எல்லாவிதமான செல்வங்களும் கிட்டும். எண்ணிய பொருள் கைகூடும். தீமைகளும் பாவங்களும் உருத்தெரியாமல் போய்விடும். கணக்கற்ற பிறவியெடுத்து அல்லல்படுகிறோம் அல்லவா? அந்த துன்பமும் தீர்ந்து போகும். இவையெல்லாம் ராமா என்று உச்சரிப்பதால் கிடைத்துவிடும் – என்பது கம்பர் தரும் நம்பிக்கை .

 

ராமன் ஒருவன் தான் . அவன் எத்தனை ராமனாய் இருக்கிறான் என்பதை கவியரசு கண்ணதாசன் ஒரு பாடலில் அழகாய் விளக்குவார் . இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப் பின் 2 – ம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்ன வார்த்தையை கேட்டு , ராமர் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டு விட்டு வரும்படி தம்பி லட்சுமணனிடம் ஆணையிடுவார். அதனை ஏற்று லட்சுமணன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்புவார் . அப்போது ராமபிரான் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பார். அதனை கண்டு லட்சுமணன் அண்ணன் ராமரைப் பார்த்து ” ஏனன்னா இது என்ன ? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள்… இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்பார் .

‘ஆணையிட்டது கோசலராமன்..
அழுதுகொண்டிருப்பது சீதாராமன்’ என்று செல்வார் ராமர் . இந்த இடம் கண்ணதாசனை சிந்தனையை தூண்ட எழுதப்பட்டது தான் ” ராமன் எத்தனை ராமனடி ” பாடல் . அதில் பல ராமன்களை பாட்டியலிடுவார் கவியரசு .

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி – அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி – தேவன்
(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்ட – கல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்த – சீதாராமன்
அரசாள வந்த மன்னன் – ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்த – சுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்ற – கோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்ட – தசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும் – கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் – ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

வம்சத்திற்கொருவன் – ரகுராமன்
மதங்களை இணைப்பவன் – சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் – ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் – அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!
ராம்! ராம்! ராம்!!
என அடுக்கி இருப்பார் கண்ணதாசன் .

மகாவிஷ்ணு தசரதகுமாரனாக அவதாரம் செய்தார். தசரதருக்கு வெகு நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்தது குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட பொழுது துன்பங்கள் எல்லாம் நீக்கி ஆனந்தத்தை கொடுக்கக் கூடிய பெயர் ‘ராமன்’ என்ற பெயரை வைத்தார்கள்.

தசரதர் மெய்மறந்து அந்த பெயரை தன் மகனுக்கு வைத்தார். தசரதனுடைய குமாரனுக்கு ‘ராமன்’ என்று பெயரை வைத்தார்களே தவிர ‘ராமா ராமா’ என்பது அனாதியாக உலகம் தோன்றிய காலம் முதல் உபநிஷத்திலேயே நாமமாக அது உள்ளது . அதனை ‘தாரக நாமம்’ என்று சொல்லுவார்கள். எத்தனையோ கோடிக்கணக்கான மக்களுடைய துன்பங்களை எல்லாம் கடக்கவைப்பது ராம நாமம். தசரத ராஜாவுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் துன்பங்களை போக்கியதால் ‘ராமன்’ என்று பெயர் வைத்தார்கள்.

ஸ்ரீராமன். தாடகா ஸம்ஹாரம் மூலமாக ரிஷிகளுக்கு எல்லாம் வந்த துன்பதைப் போக்கடித்து ஆனந்தத்தைக் கொடுத்தார். கல்லாய் கிடந்த அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்து அனந்தமளித்தார் . பதினான்கு ஆண்டு வனவாசம் மேற்கொண்டு , யாத்திரை செய்து ரிஷிகளுக்கு எல்லாம் தரிசனம் கொடுத்தார். இப்படி பல செய்கையாலும் பலருக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பது ‘ராம நாமம்’ இன்றைக்கும் பலரின் மனதிற்கு சாந்தியும் , ஆனந்தத்தையும் அளிக்ககூடியது .

அயோந்தியில் ராமர் கோயில் எழுவதன் மூலம் ராமவதார மகிமை சர்வதேச கவனத்தை பெறும் . அதன் மூலம் உலகம் உய்ய வழிபிறக்கும் . ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெயஜெய ராம் .