×

டிடிவியுடன் இணையும் ஓபிஎஸ் சகோதரர்? அரசியலில் ஓபிஎஸ்க்கு செக் மேட்..

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா அமமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா அமமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நீக்கப்பட்டார். இதனால் அதிமுகவிற்குள் மீண்டும் சலசலப்பு தொடங்கியுள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ராஜா நீக்கப்பட்டார் என மேலோட்டமாக தகவல் வெளியானாலும்
 

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா அமமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா அமமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நீக்கப்பட்டார். இதனால் அதிமுகவிற்குள் மீண்டும் சலசலப்பு தொடங்கியுள்ளது.
 


கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ராஜா நீக்கப்பட்டார் என மேலோட்டமாக தகவல் வெளியானாலும் உண்மை அது இல்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள். அதன்படி, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா கடந்த 19-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் அதில் முறைகேடு செய்துள்ளார் என்ற ஆதாரம் முதல்வர் கவனத்திற்கு சென்றதாகவும் அதனடிப்படையில் ராஜாவை கட்சியிலிருந்து முதல்வர் நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தனது தம்பியை தன் கையெழுத்தை வைத்தே கட்சியிலிருந்து நீக்க வைத்துவிட்டார்கள். எடப்பாடி பழனிசாமி தமது தரப்பை ஓரங்கட்டுகிறார் என்ற மன வருத்தத்தில் ஓபிஎஸ் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இப்படி இருக்க ஓபிஎஸ் நினைத்திருந்தால் கட்சியிலிருந்து என்னை நீக்காமல் பாதுகாத்திருந்திருக்கலாம். ஆனால் அவர் தனது பதவியை காப்பாற்றிக்கொள்ளவும், தம்பி என்றும் பார்க்காமல் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார் என அவர் நற்பெயர் வாங்குவதற்கும் என்னை பலிகடா ஆக்கிவிட்டார் என ராஜா கொதிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இனி அதிமுகவில் இணைவது செல்லுபடி ஆகாது என்பதால் ஓ.ராஜா டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஓபிஎஸ்ஸூக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கிணறு விவகாரத்தில் சொந்த ஊர் மக்கள் மத்தியில் செல்வாக்கை அவர் இழந்திருக்கிறார். மேலும் அவருக்கு எதிராக தங்க தமிழ்ச்செல்வன் தீவிர அரசியல் செய்வதால் அவரை சமாளிக்க முடியாமல் திணறி வரும் ஓபிஎஸ்க்கு எதிராக ராஜாவும் அரசியல் செய்ய ஆரம்பித்தால் ஓபிஎஸ்ஸின் அரசியல் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். 

அதேசமயம் டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கட்சி மாறப்போவதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் இதுபோன்ற தகவல்கள் டிடிவி தினகரனுக்கு உற்சாகமளித்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். ஏனெனில் தங்க தமிழ்ச்செல்வன் ஒருவேளை கட்சி மாறினால் தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் செல்வாக்குடன் வலம் வரும் ஓ.ராஜாவை வைத்து அப்பகுதிகளில் அரசியல் செய்யலாம் என்ற ப்ளானில் இருக்கிறாராம் தினகரன்.

ஆனால் தங்க தமிழ்ச்செல்வனை தக்கவைத்துக்கொண்டு, ஓ ராஜாவையும் இணைத்துக்கொண்டால் தேனியில் தினகரனின் கரம் பலமாகி ஓபிஎஸ்ஸின் கரம் பலவீனமாகும் என்பதே நிதர்சனம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஒருவேளை டிடிவியுடன், ஓ.ராஜாவும், தங்க தமிழ்ச்செல்வனும் இணைந்துகொண்டால் ஓபிஎஸ்ஸூக்கு சொந்த ஊரிலேயே அரசியல் செய்ய முடியாத பலத்த செக் மேட் விழும் என்கின்றனர் அவர்கள்.