×

சிறையில் சசிகலா போட்ட உத்தரவு… டி.டி.வி.தினகரனை மடக்கிய பா.ஜ.க..!

அதிமுகவுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி அதன் மூலமாக மட்டுமே தமிழகத்தில் திமுகவை ஒடுக்கமுடியும் என்று டெல்லி பாஜக மேலிடத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் பெங்களூருவிலிருந்து ஒரு பரபரப்புச் செய்தி தமிழகத்துக்குள் தடதடத்தது. பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை தினகரன் சந்திக்க வழக்கம் போல் சென்றதாகவும், ஆனால் அன்று சசிகலாவைச் சந்திக்க முடியாமல் தினகரன் திரும்பி விட்டதாகவும் அந்தத் தகவல் பரவியது. தினகரனின் அணுகுமுறைகள் சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை என்றும் அதனால்தான் அவரை
 

அதிமுகவுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி அதன் மூலமாக மட்டுமே தமிழகத்தில் திமுகவை ஒடுக்கமுடியும் என்று டெல்லி பாஜக மேலிடத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் பெங்களூருவிலிருந்து ஒரு பரபரப்புச் செய்தி தமிழகத்துக்குள் தடதடத்தது. பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை தினகரன் சந்திக்க வழக்கம் போல் சென்றதாகவும், ஆனால் அன்று சசிகலாவைச் சந்திக்க முடியாமல் தினகரன் திரும்பி விட்டதாகவும் அந்தத் தகவல் பரவியது. தினகரனின் அணுகுமுறைகள் சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை என்றும் அதனால்தான் அவரை சந்திக்க மறுத்துவிட்டார் என்றும் இந்தத் தகவலுக்கு தலைவாரிப் பூச்சூடி பலரும் ஊடக சாலைகளுக்கு அனுப்பினர்.

ஆனால், அன்று சசிகலாவை மிக முக்கியமான நபர் ஒருவர் மிக முக்கியமான காரியத்துக்காக சந்தித்ததால்தான் தினகரனைச் சந்திக்க முடியவில்லை என்று இப்போது தகவல் கிடைத்திருக்கிறது. அந்த முக்கியமான நபர் சந்திரலேகா ஐஏஎஸ். ஜெயலலிதா, சசிகலா பற்றி எழுதும்போது சந்திரலேகா ஐஏஎஸ்ஸைத் தவிர்த்துவிட முடியாது. ஆரம்ப காலத்தில் சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அறிமுகத்தை ஏற்படுத்தியவர் சந்திரலேகாதான் என்றும் ஒரு தகவல் உண்டு. அதன்பின் சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பற்றியும், அந்த சூழலில் நடந்தது என்ன என்பதையும் தமிழ்நாடு அறியும்.

இந்த நிலையில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டது முதலே அவருக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிமுகவுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி  அதன் மூலமாக மட்டுமே தமிழகத்தில் திமுகவை ஒடுக்கமுடியும் என்று டெல்லி பாஜக மேலிடத்தில் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதற்கேற்றாற்போல் அவர் சசிகலாவை ஆதரித்து வெளிப்படையாகத் தொடர்ந்து கருத்து சொல்கிறார்.

இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான சந்திரலேகா கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி சசிகலாவைச் சிறையில் சந்தித்திருப்பதன் மூலம் அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் ஒரு சமரசத்தை உண்டு பண்ணும் சுப்பிரமணியன் சுவாமியின் முயற்சி முக்கியக் கட்டத்தை அடைந்துள்ளதாக சொல்கிறார்கள்.                   

இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் டி.டி.வி.தினகரன், அவரது மனைவி, மகள் ஆகியோருடன், தினகரனின் சகலை டாக்டர் கார்த்தி, சசிகலாவின் பி.ஏ. கார்த்தி, கார்டன் மேனேஜர் நடராஜன், விவேக், சகிலா, தேவாதி பட்டாச்சாரியார் என்று பலரும் நேற்று சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

இவர்களில் தினகரன், அனுராதாவுடன் மட்டும் சசிகலா சுமார் ஒருமணி நேரம் உரையாடியிருக்கிறார். அப்போது கடந்த மாதம் சந்திரலேகா பாஜகவின் தூதுவராக தன்னை சந்தித்துப் பேசியது பற்றி தினகரனிடம் கூறிய சசிகலா, ‘அவங்கதான் வீணாக நம்மை பழிவாங்கினாங்க. நாம எந்த இடத்துலயும் இறங்கிப் போகல. இப்ப அவங்களே நம்மகிட்ட பேச வர்றாங்க. வாஜ்பாய் காலத்துல நாம பாஜகவோட கூட்டணி வச்சிருந்தப்ப சிற்சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டபோதெல்லாம் அனுராதாதான், ராஜ்நாத் சிங்கோட பேசிச்சு. இப்ப அவங்க பேச தயார்னா நாமளும் பேசலாம். தேர்தல் நெருங்க நெருங்கதான் மோடி நம்மளைப் பத்தி நல்லா தெரிஞ்சுப்பார்னு நினைக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஆக பாஜகவுடன் பேச தினகரனுக்கு உத்தரவிட்டிருக்கிறார் சசிகலா.

சசிகலாவின் இந்த உத்தரவுக்கான எதிரொலியாக மதுரையில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது வெளிப்பட்ட அவரது தொனியில் தெரிந்தது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி மதுரையில் செய்தியாளர்கள் தினகரனிடம் கேட்டபோது, “இந்தத் திட்டம் திமுக அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இப்போது திமுக இதை எதிர்ப்பதாக இரட்டை வேடம் போடுகிறது. இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டில் ஏற்கனவே வழங்கப்படுகிற விலையில்லா பொருட்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதுதான் அமமுகவின் கோரிக்கை” என்று மென்மையாக பதிலளித்தார் தினகரன்.

முதல்வர், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் பற்றிய கேள்விக்கு, “போயிட்டுதான் வரட்டுமே. முதலீடுகளை ஈர்க்கணும்னு எதிர்பார்க்கிறோம். ஈர்த்து வந்தால், வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தால் நல்லதுதான்” என்று ஆச்சரிய பதில் தந்தார் தினகரன்.

சசிகலாவின் விடுதலை பற்றி கேட்கப்பட்டபோது, “அவர்களை வெளியே எடுக்க சட்ட ரீதியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று பதிலளித்தார் தினகரன்.வாய்ப்பு கிடைத்தால் அதிமுகவையும், பாஜகவையும் ’வச்சி செய்து’ வந்த தினகரன், இப்போது மென்மையான பதில் தருவது அதிமுக- அமமுக- பாஜக இடையே ஒரு முக்கோணப் புரிந்துணர்வு முளைவிட்டு வருவதை காட்டுகிறது.