×

சிறுத்தைகளுக்கு என்னாச்சு... சட்டுனு வெளிநடப்பு செய்த எம்எல்ஏக்கள் - காரணம்  இதுதானாம்!

 

ஒமைக்ரான் பரவலுக்கு மத்தியில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டாம் முறையாக இன்று கூடியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று கலைவாணர் அரங்கில் கூட்டம் தொடங்கியது. ஆனால் ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, அம்மினி கிளினிக் மூடல் உள்ளிட்ட பல காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆளுநர் உரையை புறக்கணித்தும் எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இது எதிர்பார்த்தது தான் என்றாலும், எதிர்பாராத மற்றொரு நிகழ்வும் அரங்கேறியது.

ஆம் திமுகவின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், திருப்போரூர் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட நான்கு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளியில் வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிந்தனைச் செல்வன், "நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெரும் மசோதா இந்நேரம் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அது ஆளுநர் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது; இது வாக்களித்த மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம். ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு அல்ல. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளோம். 

ஆளுநர் சட்டப்பேரவையில் தீர்மானிக்கும் சட்ட முன்வடிவுகளை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் ஆளுநர் காலம் தாழ்த்துவது தமிழக மக்களுக்கு எதிரானது'' என விளக்கமளித்தார். அதேபோல அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ட்வீட்டில், "ஆளுநரின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்து இன்று ஆளுநர் உரையின் போது விசிக வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல் என கண்டித்து வெளிநடப்பு செய்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.