×

ரஜினியின் அரசியல் நிலைபாடுகள் – பயமா… நிதானமா? #Rajini

16 வருஷம் கோமாவில் இருந்த ஜெயம் ரவி நினைவு திரும்பி, டிவி பார்ப்பார்.. அதில் அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி பேசும் காட்சி ஒளிப்பரப்பாகும். அதைப் பார்த்துவிட்டு ‘இது 1996-ம் வருஷம்’ என்று சொல்வார் ஜெயம் ரவி. சென்ற வருடம் வெளியான கோமாளி படத்தின் டிரைலரில் இருந்த காட்சி இது. (ரஜினியை நேரடியாக தாக்குவதாக எழுந்த புகாரால் அந்த டிரைலரைப் படக்குழு நீக்கிவிட்டார்கள்) ரஜினியின் அரசியல் பற்றி பேச வேண்டுமென்றால் நாம் எப்போதும்போல 1995-ஆண்டிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
 

16 வருஷம் கோமாவில் இருந்த ஜெயம் ரவி நினைவு திரும்பி, டிவி பார்ப்பார்..  அதில் அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி பேசும் காட்சி ஒளிப்பரப்பாகும். அதைப் பார்த்துவிட்டு ‘இது 1996-ம் வருஷம்’ என்று சொல்வார் ஜெயம் ரவி. சென்ற வருடம் வெளியான கோமாளி படத்தின் டிரைலரில் இருந்த காட்சி இது. (ரஜினியை நேரடியாக தாக்குவதாக எழுந்த புகாரால் அந்த டிரைலரைப் படக்குழு நீக்கிவிட்டார்கள்)

ரஜினியின் அரசியல் பற்றி பேச வேண்டுமென்றால் நாம் எப்போதும்போல 1995-ஆண்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். அந்த வருடத்தின் பொங்கலுக்கு வெளியானது ‘பாட்ஷா’. ரஜினியை மாஸ் ஹீரோவாக்கிய படம் அது என்றால் மிகையல்ல. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். பாட்ஷா பட வெற்றி விழாவில் ‘தமிழ்நாட்டில் நடக்கும் வன்முறைகள் பற்றி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசினார் ரஜினி. அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் அதிமுக காரராக இருந்தும் துணிச்சலாகப் பேசினார் ரஜினி.

அதிமுக அரசு ரஜினியின் பேச்சால், அவருக்குப் பலவிதங்களில் தொந்தரவு கொடுக்க, அடுத்த வருஷம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ‘திமுக – த.மா.கா கூட்டணிக்கு தன் ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்தார். பாட்ஷாவுக்கு அடுத்து வெளியான ‘முத்து’ திரைப்படத்திலும் அரசியல் பன்ச் வசனங்கள் நிறைய இருந்தன.

ரஜினி கட்சி தொடங்க போகிறார்… என்ற யூகம் அன்றைக்கு தொடங்கிய இன்று வரை நீடித்துக்கொண்டே இருக்கிறது. கால் நூற்றாண்டாகி விட்டது. அதற்கு தீனி போடுவதுபோல ரஜினி படங்களின் பன்ச் டயலாக் மூலமாகவும், விழாக்களில் பேசுவது மூலமாகவும் மறைமுகமாக தான் அரசியலுக்கு வருவதைச் சொல்லிக்கொண்டே இருந்தார் அல்லது நான் வர மாட்டேன் என்று உறுதியாகச் சொல்ல வில்லை என்றும் கொள்ளலாம்.

1996 ஆம் ஆண்டில் ரஜினியின் ஆதரவால் மட்டுமே திமுக வென்றது என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. அதனால், அவரின் ஆதரவைப் பெறுவதற்கு பல கட்சிகளும் முயன்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் அவரை இணைக்கும் பல முயற்சிகள் நடந்தன. ரஜினி பிடிக்கொடுக்காமல் நழுவிக்கொண்டிருந்தார்.

இடையிடையே அரசியல் வருவது குறித்து சமிஞ்சைகளை அனுப்பவும் ரஜினி மறக்க வில்லை. அது பெரும்பாலும் அவரின் படங்கள் வெளியிட்டின் போது இருக்கும். அதனால், அவை படத்திற்கான விளம்பரமாக விமர்சனம் செய்யப்பட்டது.

2004 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல். பி்ரசாரத்திற்காக அப்போதைய பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வாஜ்பாய் சென்னை வந்திருந்தார். அப்போது வாஜ்பாயைச் சந்தித்து பேசினார் ரஜினி. அந்தத் தேர்தலில் அதிமுகவும் பாஜக கூட்டணி வைத்திருந்தது.  வாஜ்பாய் நதிகள் இணைப்புத்திட்டத்தை முன்மொழிந்திருந்தார். ரஜினி தனது ஆதரவை நேரடியாகத் தெரிவிக்காமல், ”நாட்டின் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க யார் முயற்சி எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப்போடுங்கள்’ என்று மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார். ஆனால், அந்தத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெல்ல முடியவில்லை. எனவே, ரஜினி வாய்ஸ் எடுபட வில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

காவிரி பிரச்சனையின்போது திரையுலகம் ஒன்றாக உண்ணாவிரதம் இருந்தபோது, அவர் அடுத்த சில நாட்களில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார் ரஜினி. இது தமிழ் உணர்வாளர்கள் இடையே கடும் கண்டனத்தை எதிர்கொண்டது.

2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பாஜக ஆதரவு நிலைபாட்டை ரஜினியை எடுக்க வைக்கும் முயறியாக ரஜினியின் வீட்டுக்கே சென்று பார்த்தார் மோடி. ஆனால், ரஜினியின் ஆதரவு வாய்ஸ் பாஜகவுக்குக் கிடைக்கவில்லை. ஆனால், மோடியின் பண மதிப்பு நீக்கம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ரஜினி ஆதரவு அளித்தார். இதனால், அவர் மீது பாஜக ஆதரவு என்ற சாயம் பூசப்பட்டது. அவர் மறுத்தாலும் அவரின் நிலைபாடுகள் அவ்விதமே காட்டுகின்றன என்பதே யதார்த்தம்.

இன்று, நாளை என்று தள்ளிக்கொண்டே வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம்  2017 டிசம்பரில் சென்னை ராகவேந்தர் திருமண மண்டபத்தில் ‘தான் நிச்சயம் கட்சி ஆரம்பிப்பது உறுதி. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிப்போம்’ என்று உறுதியாகச் சொன்னதும் மீண்டும் தொடங்கியது ரஜினி அரசியல் ஃபீவர். ரசிகர்கள் உற்சாகமாக வேலைகளைப் பார்த்தனர்.

அந்த அறிவிப்புப் பிறகு அனைத்து அரசியல் சம்பவங்களின் போதும் ரஜினியின் கருத்து கேட்கப்பட்டது. அவரும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குச் சென்று பார்த்தும் வந்தார். அப்போது அவர் விமானநிலையத்தில் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியாக இருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் இருந்ததாகவும், சென்னை மெரினா போராட்டத்தின் இறுதியில் திவிரவாதிகள் கலந்துவிட்டதாகவும், ஐபிஎல் எதிர்ப்புப் போராட்டத்தில் போராட்டத்தின் நோக்கம் பற்றி ஏதும் சொல்லாமல், காவலர்கள் தாக்கப்பட்டது பற்றி கண்டனம் தெரிவித்தும், எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரித்தும் என்பதாக ரஜினியின் நிலைபாடுகள் பெரும்பாலும் பாஜகவின் நிலைபாடு ஒட்டியே இருந்தது.

சரி, இன்றைய விஷயத்துக்கு வருவோம். ரஜினி எழுதிய கடிதம் என ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பரவியது. அக்கடிதத்தின் சாரம், “சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கும் ரஜினியால் கொரோனா தொற்று பரவிகொண்டிருக்கும் இந்தச் சூழலில் கட்சி தொடங்க முடியாது. அதனால் டிசம்பரில் நான் என்னவிதமான முடிவை அறிவித்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள்’ என்பதுதான். அக்கடிதம் உண்மையா… போலியா என்ற விவாதம் கிளம்பியது. இன்று ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்தக் கடிதம் நான் வெளியிட்டதல்ல.. ஆனால், அதில் குறிப்பிட்டிருக்கும் என் உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மைதான்’ என்று கூறியிருக்கிறார்.

ரஜினி துணிவோடு கட்சி தொடங்க ஆரம்பித்தும் பின் வாங்குவதற்கான காராணங்கள் தெளிவானவை. 70 வயதாகும் ரஜினி கட்சி ஆரம்பித்த உடனே ஆட்சியைப் பிடிப்பது சாத்தியமில்லை. 2021 –ல் முடியவில்லை என்றால் 2026 ஆல் இந்தளவு வேகத்தோடு அவர் இயங்க முடியுமா என்பதில் அவருக்கே தயக்கம் இருந்ததால்தான், இடையில் நான் முதல்வர் வேட்பாளர் அல்ல.. ஓர் இளைஞர்தான் முன்னிருத்தப்படுவார் என்று சொல்ல வைத்து. அதனால், பலருக்கு அந்த இளைஞர் தான்தான் என நினைக்கத் தொடங்கினர்.

மறுபக்கம், கட்சி தொடங்கி மற்ற கட்சிகளோடு கூட்டணி வைத்தால், அக்கட்சிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும். எப்படியும் பாஜகவோடு கூட்டணி வைக்க மேலிருந்து அழுத்தம் அளிக்கப்படும். அதை நிராகரிக்கவும் முடியாது. ஏற்கவும் முடியாது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அவர் மீதான காவி முத்திரை உண்மையாகி விடும் என்ற தயக்கம் அவருக்கு இருக்கும்.

ரஜினியின் உடல்நிலை குறித்து கடிதத்தில் சொல்லப்பட்டவற்றை அவரே உண்மை என்று ஒத்துக்கொள்கிறார். கொரோனா தொற்று முழுமையாக தேர்தலுக்கு முன் தீர வாய்ப்பில்லை என்பதே பலரின் கருத்து. அதனால், டிவி, சோஷியல் மீடியாவில் மட்டுமே பேசி கட்சியைக் கட்டிவிட முடியாது. அப்படிச் செய்யும் பட்சத்தில் மிக சொற்பமான வாக்குகளே வாங்க முடியும். அப்படி நடந்துவிட்டால், கால் நூற்றாண்டாக ரஜினியின் அரசியல் வருகை மீது கட்டமைத்து வைத்திருக்கும் பெரிய பிம்பம் உடைந்து சுக்கு நூறாகி விடும். அது அவரின் திரைப்பட வாழ்க்கையையும் இணைத்து தோல்வியைத் தழுவியதாகப் பேசப்படும் என்று கருதக்கூடும். ரஜினியில் முடிவுகள் எப்போதுமே பயமின்றியே வெளிப்பட்டிருக்கிறது. சில தயக்கங்களால் நிதானமாக முடிவெடுக்க நினைக்கிறார் ரஜினி.

இப்போதை நிலையில் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் தமிழக கூட்டணிகளில் ஒன்றுக்கு 1996 தேர்தல் போல ’வாய்ஸ்’ கொடுக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. அது பாஜக இருக்கும் கூட்டணியாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.