கயல்விழி அழகிரியின் கோரிக்கையை நிராகரித்த விஜய்- முழு பின்னணி
தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பலர் சமீபத்தில் தவெகவில் இணைந்தனர்.
நேற்று முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன் மற்றும் பாஜகவின் முன்னாள் நிர்வாகி விஜயதாரணி உள்ளிட்டோர் தவெக தலைமையின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வில் கயல்விழி அழகிரியும் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் தவெகவில் இணையவில்லை. இதன் பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. ,
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான தவெக வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை கயல்விழி அழகிரி வெளிப்படுத்தினாராம்.
மதுரை அரசியலில் அழகிரி குடும்பத்திற்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் நிலையில், அந்த ஆதரவை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் கயல்விழி இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனால் தவெக தலைமையோ இதுவரை எந்தவொரு பதவிக்கும் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்கும் நிலைப்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கயல்விழி அழகிரி எதிர்பார்த்த உறுதிமொழி இதுவரை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தான் அவர் கட்சியில் சேர்வது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், கயல்விழி அழகிரிக்கும் தவெக தலைமையுக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றிலும் முடங்கிவிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருதரப்பிலும் தொடர்பு தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.