இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவும் பாமகவின் ஆதரவு யாருக்கு?
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. ஏற்கனவே திமுக, தவெக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட்கள் என்று 5 முனைப் போட்டி நிலவி வருகிறது. தாராபுரம் தொகுதியை பொறுத்தவரை அதிமுக வலுவாக உள்ள தொகுதியாகும். இதனால் மீண்டும் தாராபுரத்தை கைப்பற்ற அதிமுக, தவெக தீவிரமாக இயங்கி வருகிறது. ஆனால் மதுராந்தகத்தில் சமூக ரீதியிலான வாக்குகளை அறுவடை செய்தாலே வெற்றி பெற முடியும். அதன்படி தவெக உடனான கூட்டணியில் விசிக இருக்கிறது. இந்த தொகுதியில் பாமக தனித்து நின்றாலே 10% வாக்குகளை கைப்பற்றும் வலிமை இருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததன் காரணமாக சட்டசபை தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
அதேபோல் திமுக மற்றும் அதிமுக வேட்பாளருக்கு இடையிலான வித்தியாசம் 10 ஆயிரம் வாக்குகள் தான். இந்த 10 ஆயிரம் வாக்குகளை யார் கைப்பற்றுகிறார்களே அவர்கள் தான் மதுராந்தகத்தில் வெல்ல முடியும். இதன் காரணமாகவே பாமகவின் ஆதரவை பெறுவதில் அத்தனை கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன. அன்புமணியை பொறுத்தவரை அதிமுக உடனான கூட்டணியால் பெரிய லாபம் அடையவில்லை. 2019 தொடங்கி 2026 வரை பாமக சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. தவெக தலைமையுடன் பாமக நட்புடன் இருந்தாலும், விசிக அமைச்சரவையில் பங்கேற்றுள்ளது. இதனால் தவெக கூட்டணிக்குள் பாமக செல்ல முடியாத நிலை இருக்கிறது. மறுபக்கம் விசிக கூட்டணியில் இருந்து விலகிவிட்ட சூழலில், பாமகவை தங்கள் பக்கம் கொண்டு வர திமுக தீவிரமாக இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் தவெகவை வீழ்த்திவிட்டால், உள்ளாட்சித் தேர்தலில் கடுமையான போட்டி அளிக்க முடியும் என்று திமுக கருதுகிறது. அதேபோல் விஜய்யின் பிம்பத்தையும் உடைக்க முடியும் என்று கருதுகிறது.