×

"100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது" - விஜயாகாந்த் அதிரடி!
 

 

கடந்த 2011ம் ஆண்டில் திமுகவையே வீழ்த்தி பிரதான எதிர்கட்சிக்கான தேமுதிகவின் மவுசு தற்போது குறைந்துவிட்டது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றியதும் கட்சி வலுவிழந்து போனது. அடுத்தடுத்து வந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியைக் கண்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி அமைத்து களம் கண்டது. எனினும், ஒரு இடத்தில் கூட தேமுதிகவால் வெற்றிபெற முடியவில்லை. 

இதைத் தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். ஒரு சில இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்களும் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த விஜயகாந்த், நமக்கான காலம் நிச்சயம் வரும் என தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்திருந்தார். எனினும், கடந்த காலத்தில் இருந்தது போல கட்சி மீண்டெழும் என்ற நம்பிக்கை தொண்டர்களுக்கு இல்லை என்பது போலவே தெரிகிறது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. நமது கழகம் என்றென்றும் தமிழகத்தில் வேரூன்றி இருக்கும்.   கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம். நமது கழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதற்கு தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.