×

"இப்போ புரிதா? ஏன் எய்ம்ஸ் செங்கல உதயநிதி தூக்குனாருனு?" - வானதி சீனிவாசன் கிடுக்குப்பிடி!

 

தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்திருந்தது. இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கை நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு 11 கல்லூரிகளையும் திறந்துவைக்க பிரதமர் மோடி ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். பிரதமரை வரவேற்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகியுள்ளது.

இவ்வேளையில் திமுக மீது விமர்சனமும் எழுந்துள்ளது. தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி வரும்போது கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை என திமுக அமைப்புச் செயலாலர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். இதனால் எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்புக்கொடி காட்டி, பலூன் விட்ட திமுக, ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மத்திய அரசிடம் பணிந்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது. அதேபோல எய்ம்ஸ் செங்கல் என கல்லை காட்டி உதயநிதி செய்த பிரச்சாரம் குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது. எல்லாம் அரசியல் தான் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. 

கூட்டணிக் கட்சிகளும் திமுகவின் எடுத்த நிலைப்பாட்டை தான் எடுத்திருக்கின்றன. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் நேரத்தில் இருப்போம்; எதிர்க்கும் நேரத்தில் எதிர்ப்போம்" என்றார். இச்சூழலில் இதுகுறித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த காலத்தில் திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைக்க வரும்போது GoBackModi எனக் கூறினர். 

ஆனால், அந்தத் திட்டத்தின் மூலமாக ரூ.2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டசபையில் நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்திருக்கிறார். பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று கூறினாலும் கூட அந்தத் திட்டத்தால் 2,000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது. இவையெல்லாம் திமுகவினர் இன்று சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக நிதி உதவி கிடைத்தால் தான் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா சூழல் காரணமாக ஜப்பானில் இருந்து ஒரு குழு இங்கு வந்து ஆய்வு கொள்வதற்கு தாமதமாகிறது.

இவையனைத்தும் தெரிந்திருந்தும் எய்ம்ஸை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எய்ம்ஸ் கட்டுமானப் பணியை துவக்கி விட்டார்களா? 7 மாத காலமாகியும் ஒற்றைச் செங்கலை கையில் வைத்து ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? இவர்கள் அரசியலுக்காக ஒற்றைச் செங்கலை வைத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா?