×

"அண்ணாமலைக்கு என் பெயரை உச்சரிக்க கூட தகுதியில்லை" - வெளுத்துவாங்கிய வைகோ!

 

தமிழ்நாட்டில் மேகதாது அணை பிரச்சினை முடிந்து வழக்கம்போல முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடங்கியுள்ளது. அதிமுக, பாஜகவினர் திமுக அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு தேனியில் நடைபெற்ற பாஜக போராட்டத்தில் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக வைகோ ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலடி கொடுத்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "நான் கட்சி மாச்சரியங்களைக் கடந்து, ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸுடன் ஐந்து மாவட்டங்களிலும் முல்லைப் பெரியாற்றைப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல், கோடிக்கணக்கான மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் பாசனத்தை இழக்கும் என்ற பிரச்சாரத்தை முன்வைத்து மக்களைத் திரட்டினேன். கட்சிக் கொடி கட்டாமல் பொதுமக்களை, விவசாயிகளைத் திரட்டினேன். விழிப்புணர்வு ஏற்பட்டது.

நான்கு முறை உண்ணாவிரத அறப்போர் நடத்தினேன். கேரளத்திற்குச் செல்கின்ற 13 சாலைகளையும், இரண்டு முறை தடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினேன். அப்பொழுதுதான் கேரள முதல்வர் அச்சுதானந்தன், “உங்களிடம் ஒரு வைகோ இருந்தால், எங்களிடம் நூறு வைகோக்கள் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுச் சொன்னார். தென் மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு என்றால், பென்னி குயிக் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதே நான்தான். 

இந்தப் பரபரப்பான காலகட்டத்தில் பாஜகவில் இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்குத் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றும் தெரியாது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அகரம்கூடத் தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்தத் தகுதியும் கிடையாது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். அணையை உடைக்கலாம் என்று தற்போது கேரள அரசு திட்டம் வகுக்கிறது. அதனை எதிர்த்துத் தமிழக மக்கள் பொங்கி எழுவார்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.