×

சிலரின் முகத்தில் ஓங்கி அறைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

 

தமிழ்த்தாய் வாழ்த்து இனி அரசின் மாநிலப்பாடல் என்று அரசாணை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.   அதுகுறித்து அவர்,  தனது மனோன்மணீயம் நாடகத்தில் தமிழ்த் தெய்வ வணக்கமாகச் சுந்தரனார் அவர்கள் இயற்றிய பாயிரப் பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்துப் போற்றினார் தலைவர் கலைஞர். அதற்கு மேலும் சிறப்பும் பெருமையும் சேர்க்கும் வகையில் இனி அப்பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.  நீராரும் கடலுடுத்த எனும் மாநிலப் பாடல் பாடப்படுகையில், மாற்றுத்திறனாளிகள் தவிர, இனி மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று அறிவித்திருந்தார்.  

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.   இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  தமிழ்த்தாய் வாழ்த்து இனி அரசின் மாநிலப்பாடல் என்று அரசாணை  வெளியிட்ட பின்னர், திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பை ஏற்கிறதோ அப்போதெல்லாம் அது தமிழின் ஆட்சியாக தமிழகத்தின் ஆட்சியாக இருந்துள்ளது என்று பெருமிதத்துடன் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  அதே நிலை தற்போது தொடர்வதற்கான பல அரசாணைகளை வெளியிட்டு வருகிறது திமுக அரசு .

தமிழே தெரியாமல் இனிமேல் எவரும் தமிழ்நாட்டில் அரசுப் பணியில் சேர முடியாது என்பதை உறுதி செய்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் விதிகள் மாற்றப்பட்டு டிசம்பர் 1ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  அதற்கு முன்பாக நவம்பர் மாதம் 1ஆம் தேதி,  தமிழ் வழியில் பயின்ற அவர்களுக்கு அரசு பணிகளில் 20 விழுக்காடு முன்னுரிமை அளித்து விதிமுறைகளை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டது .

இந்நிலையில் தற்போது தமிழ்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவித்திருப்பது மு. க. ஸ்டாலின் அரசின் சாதனை மகுடத்தில் வைர ஒளி வீசுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

 அவர் மேலும் இதுகுறித்து,  , தமிழ் தாய் வாழ்த்து பாடல் இனி அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக பாடப்பட வேண்டும் .   அப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும்.  இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது போற்றத்தக்கது என்கிறார் .

 அவர் முக்கியமாக ஒன்றை  அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.    இந்த அரசாணையின் மூலமாக திமுக அரசு தமிழரசு தமிழ் தேசிய இனத்திற்கான அரசு என்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிலைநாட்டி இருப்பதற்கும்,  இந்த ஒற்றை அரசாணையின் மூலமாக நாம் யார் என்பதை இன்று சிலரின் முகத்தில் ஓங்கி அறைந்து இருப்பதற்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.