×

"அப்படி என்ன குறைய கண்டுட்டீங்க" - சட்டுனு ஆவேசமான உதயநிதி... ஏன்னா கேட்ட கேள்வி அப்படி!

 

தாத்தாவின் பேவரைட் தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி அமோக வெற்றிபெற்றார். எம்எல்ஏவாக சார்ஜ் எடுத்த கையோடு தொகுதிக்குள்ளேயே மின்னல் வேகத்தில் ஒரு ரவுண்ட் அடித்தார். அடடா இப்படி ஒரு எம்எல்ஏவா என அந்த தொகுதி மக்களே வியந்து பாராட்டினர். இது எதற்கான அச்சாரம் என்பதை மக்களும் தெரியாவதவர்கள் அல்ல. அரசியல்வாதிக்கெல்லாம் அரசியல்வாதிகள் நம் மக்கள் அல்லவா. இப்படியாக ரவுண்ட் அடித்த உதயநிதி மீண்டும் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தாத்தாவின் சுயசரிதை நூலின் பெயரையே படத்திற்கும் தலைப்பிட்டு அந்தப் படத்தில் நடித்து கொண்டிருந்தார். இப்போது ஓரளவு படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன.

இச்சூழலில் மீண்டும் அரசியல் அரங்குக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் அடித்தளம் போட்டார். அதாவது உதயநிதி அமைச்சராவது மக்களின் விருப்பம் என தடாலடியாக ஒரு போடு போட்டார். அவர் போட்ட கோட்டில் இன்னபிற அமைச்சர்களும் ரோடு போட்டு விஷயத்தை பெரிதாக்கினர். இவ்வளவு ஏன் தோழமைக் கட்சியான காங்கிரஸுக்குள்ளேயே அவ்வளவு பிரச்சினை இருக்கிறது. அந்தக் கட்சிக்காரர் ஒருவரே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் எனக்கூறி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதமே எழுதிவிட்டார்.

ஆனால் ஸ்டாலினோ மௌனமாகவே இருக்கிறார். மற்றொரு புறம் உதயநிதியை அமைச்சராக்குவதற்கான நாளை துர்கா ஸ்டாலின் குறித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு பல்வேறு தகவல்கள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ள சூழலில், உதயநிதியின் மனதில் என்ன இருக்கிறது என்பதும் அவசியம் தானே. அந்த வகையில் சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கேட்டார்கள். அதற்கு அவர், "அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பின் மீதும் எனக்கு ஆசை இல்லை. மக்கள் பணியில் என்றும் உங்களுள் ஒருவராக இருக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலினுக்கும், மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.

ஆமா இவர் இப்படி தான் அரசியலுக்கு வர மாட்டேனு சொன்னாரு... வந்துட்டாரு... இதெல்லாம் சும்மாங்க என்றார்கள். இச்சூழலில் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது பதிலளித்த அவர்,  "தை பிறந்துள்ளது. அரசியல் பணி, திரையுலகில் இலக்கு எதுவும் உள்ளதா என்று கேட்கிறீர்கள். எனக்கு அப்படி இலக்கு என்று எதுவுமில்லை. என் வேலையை நான் பார்க்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதை செய்து கொண்டு இருக்கின்றேன்” என்றார். அத்தோடு விடாமல் செய்தியாளர்களோ, "தைப்பிறந்தால் வழி பிறக்கும். உங்களுக்கு வழி பிறக்குமா?" என்றனர். சற்று ஆவேசமான உதயநிதி, "ஏன்? எனக்கு ஏற்கனவே நல்ல வழிதானே இருக்கிறது. என்ன குறையை கண்டீர்கள்?” என கேட்டு ஆஃப் செய்தார்.