×

சசிகலா விடுதலை நாளிலேயே ஜெயலலிதா நினைவிடம் திறக்க இரண்டு காரணங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா இம்மாதம் 27ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகிறார். ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்தது. அதில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப் பட்டது. தீர்ப்பு வரும் நாளில் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் அவருக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. சசிகலா இளவரசி உள்ளிட்ட மூவர் நான்காண்டு தண்டனை அனுபவித்து இம்மாதம் 27ஆம் தேதி வெளியே வருகிறார்கள். அன்றைய
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா இம்மாதம் 27ஆம் தேதி பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகிறார். ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு நடந்தது. அதில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப் பட்டது. தீர்ப்பு வரும் நாளில் ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் அவருக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.

சசிகலா இளவரசி உள்ளிட்ட மூவர் நான்காண்டு தண்டனை அனுபவித்து இம்மாதம் 27ஆம் தேதி வெளியே வருகிறார்கள். அன்றைய தினம் காலை 10 மணி அளவில் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று சசிகலா தரப்பு வக்கீல் தெரிவித்துள்ளார். சசிகலா விடுதலையாகும் அதேநாளில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவை நடத்த முடிவு எடுத்துள்ளது தமிழக அரசு.

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மரணமடைந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அதே பகுதியில் அவருக்கான நினைவிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது. அந்தப் பணிகள் முடிவடைந்து இம்மாதம் 27ம் தேதி அந்த நினைவிடம் திறக்கப்பட இருக்கிறது.

சசிகலா விடுதலையாகும் நாளும், ஜெயலலிதா நினைவிடம் திறக்கும் நாளும் ஒரே தினமாக இருப்பது எதேச்சையாக நடந்தது அல்ல என்று சொல்லப்படுகிறது. இரண்டையும் ஒரே நாளில் நடப்பதற்கான காரணமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று: சசிகலா அதிமுகவில் தன்னுடைய செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் அதன் மூலம் பலன் பெற்றவர்கள் இப்போதும் அதிமுகவில் இருக்கக்கூடும். அவர்கள் சசிகலாவின் விடுதலைக்காக அவ்வப்போது பேசியே வந்து இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சசிகலா விடுதலையின்போது அவரை வரவேற்க செல்லக்கூடும். அப்படிச் சென்று விட்டால் அதிமுகவில் கோஷ்டி பூசல் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதனால் அங்கு அவர்கள் செல்லாமல் தடுப்பதற்காக சசிகலா விடுதலையாகும் நாளிலேயே ஜெயலலிதாவின் நினைவு இடம் திறக்கும் நாளை குறித்து இருக்கிறார்கள் என்று பேச்சு அடிபடுகிறது. மற்ற விழாக்கள் என்றால் கூட சிலர் புறக்கணித்து சென்றுவிடலாம். ஜெயலலிதாவுக்கான முக்கியமான விழா என்பதால் அதிமுகவினர் குறிப்பாக, பொறுப்புகளில் இருக்கும் அதிமுகவினர் நிச்சயம் ஜெயலலிதா நினைவிட விழாவுக்கே வருவார்கள் என்பது அதிமுக தலைமையின் நம்பிக்கை.

இரண்டாவது காரணம்: பொதுவாக சிறையில் இருந்து ஒருவர் விடுதலையானால், அவர் மதிக்கும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பது, அவர்களின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துவது என்பது வழக்கமான விஷயம். சசிகலா விடுதலையாகும் நாளில் நேராக ஜெயலலிதாவின் நினைவிடம் சென்று விடாமல் தடுப்பதற்காகவும் இந்த நாளில் நினைவிடம் திறக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதன்மூலம் விடுதலையாகும் நாளிலேயே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சசிகலா மரியாதை செலுத்துவது தடுக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இரண்டு ஒரே நாளில் நடப்பதற்கான காரணங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.