×

கைவிட்ட சசிகலா; தடா போட்ட எடப்பாடி… டிடிவி எடுத்த திடீர் முடிவு!

சசிகலாவை மலை போல் நம்பிக்கொண்டிருந்த டிடிவி தினகரனுக்கு நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதனால் தான் இரவோடு இரவாகப் பேட்டி கொடுத்த தினகரன், அமமுக சோர்வடைவது போல் உணர்வதாகப் பேசினார். சசிகலாவும் வெளிப்படையாக அமமுகவுக்கோ தினகரனக்கோ ஆதரவளித்துப் பேசவில்லை. அவர் அம்மாவின் தொண்டர்கள் என பொதுமைப்படுத்தியே பேசிவருகிறார். இதனால் அமமுக தொண்டர்கள் சற்று குழப்பத்தில் தான் இருக்கின்றனர். சசிகலாவால் கைவிடப்படுவோம் என்று எண்ணிய தினகரன் அதிமுகவுடனான கூட்டணிக்கு பாஜக தலைவர்களைத் தூதுவிட்டார். அவர்களும்
 

சசிகலாவை மலை போல் நம்பிக்கொண்டிருந்த டிடிவி தினகரனுக்கு நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. அதனால் தான் இரவோடு இரவாகப் பேட்டி கொடுத்த தினகரன், அமமுக சோர்வடைவது போல் உணர்வதாகப் பேசினார். சசிகலாவும் வெளிப்படையாக அமமுகவுக்கோ தினகரனக்கோ ஆதரவளித்துப் பேசவில்லை. அவர் அம்மாவின் தொண்டர்கள் என பொதுமைப்படுத்தியே பேசிவருகிறார். இதனால் அமமுக தொண்டர்கள் சற்று குழப்பத்தில் தான் இருக்கின்றனர்.

சசிகலாவால் கைவிடப்படுவோம் என்று எண்ணிய தினகரன் அதிமுகவுடனான கூட்டணிக்கு பாஜக தலைவர்களைத் தூதுவிட்டார். அவர்களும் தினகரனைக் காரணம் காட்டி அதிக தொகுதிகளைப் பெற்றுவிடலாம் என்று எண்ணி எடப்பாடியிடம் பேசியிருக்கிறார்கள். எடுத்த எடுப்பிலேயே அதெல்லாம் முடியாது என எடப்பாடி கூறி வாயை அடைத்திருக்கிறார். இதனால் இரு பக்கமும் ஆதரவு இல்லாமல் தவித்துவந்தார். தன்மானத்தை விட்டுக்கொடுக்க மனம் வராமல் விரக்தியில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதனால் விருப்ப மனு வரவேற்கப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

இச்சூழலில் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் டிடிவி இன்று காலை அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது, தேர்தல் பிரச்சார வாகனம் மற்றும் போஸ்டர்களில் ஜெயலலிதாவின் படங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்; சசிகலா படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், தொகுதிக்கு ரூ.5 கோடி வீதம் தேர்தல் செலவிற்காக ஒதுக்கவும் டிடிவி.தினகரன் முடிவு செய்துள்ளார். வரும் 10ஆம் தேதி 234 தொகுதிகளிலும் அமமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிடவிருக்கிறார்.