"தமிழகமே அந்த சக்திகளின் குறி... அரசுக்கு ஸ்பெஷல் ஸ்பை டீம் தேவை" - திருமாவளவன் முக்கிய கோரிக்கை!
சென்னை கொளத்தூரில் தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். அதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கருத்து சுதந்திரம் என்கிற பேரில் அவதூறுகளைப் பரப்புவது வதந்திகளை பரப்புவதுதான் பாஜகவின் அரசியல். இவர்கள் செய்வது அரசியல் நடவடிக்கை அல்ல சமூக விரோத நடவடிக்கை. வன்முறையை தூண்டும் வகையில் வதந்திகளை பரப்பும் பிரிவினைவாத சக்திகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக வலைதளங்களை வதந்தி பரப்புவதற்காக தவறாக பயன்படுத்தும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். அம்பேத்கர் பிறந்த நாளன்று சாதியவாத மதவாத சக்திகள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறு பரப்புகிறார்கள். தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளின் வன்முறை அதிகரித்து வருகிறது. சமூக பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சமூக விரோதிகள் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இவற்றை அடக்கும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தனி உளவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தைக் குறி வைத்திருக்கிறார்கள் மதவாத சக்திகள். மதவெறி களமாக தமிழகத்தை மாற்ற முயற்சிக்கிறார்கள். வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். அதனால் தான் தனியே சிறப்பு உளவு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன். காவல் துறையின் சார்பில் பிரிவினை வாதத்தையும் மதவாதத்தையும் தூண்டும் வகையில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்" என்றார்.