கொங்கு மண்டல கணக்கு... அண்ணாமலை புதிய கட்சி தொடக்கத்தின் பின்னணி!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி அல்லது மக்கள் இயக்கம் தொடங்கப்போவதாக வெளியான தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
கொங்கு மண்டலத்தில் அதிமுக வலிமையாக காணப்பட்டாலும், தற்போது தவெகவின் எழுச்சி அதிமுகவுக்கு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது. இன்னொரு பக்கம் கொங்கு மண்டலத்தில் அதிமுக வலிமையாக இருக்க பாமகவும் ஒரு முக்கிய காரணம். சேலம், தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றிக்கு பாமக மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அதேபோல் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக மக்களிடையே எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். இதனை அறுவடை செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே அண்ணாமலைக்கு கொங்கு பகுதிகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனை லோக்சபா தேர்தலின் போதே காட்டி இருந்தார். அவர் பாமக மற்றும் டிடிவி தினகரன் தரப்பை சேர்த்து கொண்டால், தமிழ்நாட்டில் முக்கிய சக்தியாக உருவாக முடியும். அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகும் சூழலில், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் தனக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று அண்ணாமலை நம்புகிறார். இதன் காரணமாக புதிய கட்சி என்ற பெயரில் புதிய ரூட்டில் பயணிக்க அண்ணாமலை விரும்புவதாக சொல்லப்படுகிறது.