நான்தான் அரசாங்கம்.. என்னையே தடுத்து நிறுத்துறியா? உன்னை... - அமைச்சர் போட்ட சபதம்
சட்டமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற அமைச்சரின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், நான்தான் அரசாங்கம்.. என்னையே தடுத்து நிறுத்துறியா? உன்னை சஸ்பெண்ட் செய்தால்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என்று சபதம் போட்டு ஆவேசமாக கத்திய அமைச்சர் சட்டசபைக்கு செல்லாமலேயே திரும்பிவிட்டார்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் ஜிவேஸ் மிஸ்ரா. இவர் பாஜகவைச் சேர்ந்தவர். நேற்று சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார்.
இவர் சட்டமன்றத்தில் நுழைய முற்பட்டபோது, நுழைவு வாயிலில் நுழைந்த போது போலீசார் காரை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். மாவட்ட எஸ்பி, மாவட்ட நீதிபதி கார் உள்ளே நுழைய வேண்டும் என்பதற்காக, தனது காரை தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக உணர்ந்த அமைச்சர் ஆத்திரப்பட்டு, ஆவேசத்தில் காரை விட்டு கீழே இறங்கி வந்த போலீசாரை கடுமையாக திட்டித் தீர்த்திருக்கிறார்.
நான்தான் அரசாங்கம்.. என்னையே தடுத்து நிறுத்துறியா? உன்னை சஸ்பெண்ட் செய்தால்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என்று சபதம் போட்டிருக்கிறார்.
பின்னர் மீண்டும் காரில் ஏற வந்தவர், செய்தியாளர்கள் ஓடிவர அவர்களிடம் சென்று , மாவட்ட போலீஸ் எஸ்பி கார் உள்ளே நுழைவதற்கும், மாவட்ட நீதிபதியின் கார் சட்டமன்றத்தில் உள்ளே செல்வதற்காகவும் என் காரை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள் என்று ஆவேசத்தில் சத்தம் போட்டார் அமைச்சர். என் காரை தடுத்து நிறுத்தி காக்க வைத்த போலீசாரை சஸ்பெண்ட் செய்யும் வரைக்கும் நான் சட்டமன்றத்திற்குள் நுழைய மாட்டேன் என்று சபதம் போட்டு விட்டு காரில் ஏறி விருட்டென்று சென்றார் . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.