×

எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்புக்கு மம்தா பானர்ஜியை அழைக்காமல் நோஸ் கட் செய்த சோனியா காந்தி
 

 

சோனியா காந்தி இல்லத்தில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு விடுக்கவில்லை.

டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் நேற்று மாலை நாடாளுமன்றத்தில் இணைந்து செயல்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சரத் பவார், சஞ்சய் ரவுத், பரூக் அப்துல்லா, டி.ஆர்.பாலு மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். மம்தா கட்சிக்கு சோனியா காந்தி அழைப்பு விடுக்கவில்லை என தகவல்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களின் முக்கிய நோக்கம் மாநிலம் வாரியாக எதிர்க்கட்சி ஒற்றுமை. இது முதல் சந்திப்பு நாளை (புதன்கிழமை) மீண்டும் சந்திப்போம். சரத் பவாரும் அங்கு வருவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக சோனியா காந்தியின் இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் உயர் மட்ட தலைவர்கள் கூடி, நடந்து வரும் நாடளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடரில் அரசை கேள்வி  கேட்கும் உத்தி குறித்து விவாதித்தனர்.

காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடு தான் நேற்று சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற எதிர்கட்சி தலைவர்கள் சந்திப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைக்கப்படவில்லை என்று தகவல்.