×

"365 நாளும் சென்னையில்... ஓபிஎஸ்ஸால் போடிக்கு என்ன லாபம்?" - தங்க தமிழ்ச்செல்வன் "நறுக்" கேள்வி!

 

"365 நாளும் சென்னையில்... ஓபிஎஸ்ஸால் போடிக்கு என்ன லாபம்?" - தங்க தமிழ்ச்செல்வன் "நறுக்" கேள்வி!அதிமுகவின் கோட்டையான ஆண்டிபட்டியில் மூன்று முறை போட்டியிட்ட (2001,11,16) தங்க தமிழ்ச்செல்வன் ஹாட்ரிக் வெற்றிபெற்று அதிமுகவில் செல்வாக்குமிக்க நபராகப் பார்க்கப்பட்டவர். டான்சி வழக்கால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட மறுக்கப்பட்டு, முதல்வராகி மீண்டும் அப்பதவி முடக்கப்பட்டது. வழக்கில் விடுதலையான பிறகு அதிமுக கோட்டையான ஆண்டிப்பட்டி 2002 இடைத்தேர்தலில் களமிறங்கி முதலமைச்சரானார்.  ஜெயலலிதா அங்கு போட்டியிட தங்க தமிழ்ச்செல்வன் பதவியை ராஜினாமா செய்தார். 

அதிமுகவில் அந்தளவிற்குப் பிரபலமான ஆசாமியாக இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். அமமுகவில் இணைந்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் இவரும் ஒருவர். அப்போதிருந்தே இவருக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அதற்குப் பின் திமுகவில் ஐக்கியமான இவருக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்தார். ஓபிஎஸ்ஸின் ஆஸ்தான தொகுதியான போடியில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற பெரிய சவால். சவாலில் ஓரளவு ஜெயித்தாலும் முழு வெற்றியை வசப்படுத்த முடியவில்லை.

இருப்பினும் உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தங்க தமிழ்ச்செல்வனை களமிறக்கியுள்ளார் ஸ்டாலின். அந்த வகையில் நகர்ப்புற தேர்தல் தொடர்பாக சிலமரத்துப்பட்டியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன், "போடி எம்எல்ஏவாக இருக்கும் ஓபிஎஸ் தொகுதிக்காக எதையும் செய்யவில்லை. அதுகுறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் ஆண்டின் 365 நாட்களும் சென்னையிலேயே இருக்கிறார். 

தேர்தல் வந்தால்தான் தொகுதிக்கு வருகிறார். போடி தொகுதியில் பல இடங்களில் சாலை, கழிப்பறை, வடிகால் போன்ற அடிப்படை வசதி களில் பெரும் குறைபாடு உள்ளது. முதல்வராக, துணை முதல்வராக இருந்துள்ளதுடன் இத்தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாகவும் இருக்கிறார். இருந்தும் போடி தொகுதிக்கு அவரால் எந்த பலனும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் குறைசொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி செய்து வருகிறார்” என்றார்.