×

அடுத்த குடியரசு தலைவரா?... "அய்யா சாமிகளா ஆள விடுங்க?" - தெறிச்சி ஓடிய தமிழிசை!

 

2022ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கிறது. உபி, உத்தரக்காண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதை விட முக்கியமான தேர்தலான குடியரசு தலைவருக்கான தேர்தலும் இந்தாண்டே நடைபெறவிருக்கிறது. 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இந்தியாவின் குடியரசு தலைவராகப் பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த். பாஜக கூட்டணி சார்பாக முன்னிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் 65.65% வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். ஜூலையோடு இவரின் பதவிக்காலம் முடிவடைய போகிறது. 

இச்சூழலில் அடுத்த குடியரசு தலைவர் யார் என்ற கணக்குகள் இப்போதே தொடங்கிவிட்டன. பெரும்பான்மையான மாநிலங்களில் பாஜகவின் பலம் குறைந்துகொண்டே செல்கிறது. இதனால் தான் ஐந்து மாநில தேர்தலில் பாஜக அதீத கவனம் செலுத்துகிறது. அதில் வென்று அதிகப்படியான எம்எல்ஏக்களை பெற்றால் தான் தாங்கள் நினைப்பவர்களை குடியரசு தலைவராக்க முடியும். எதிர்க்கட்சிகளுக்கு எம்எல்ஏக்கள் அதிகரிக்கும் பட்சத்தில் கூட்டணி அமைத்து அவர்கள் நிறுத்தும் வேட்பாளர் குடியரசு தலைவராகிவிடலாம். அதற்காக எதிரணியில் இருக்கும் சரத் பவாரையும் அவர்கள் அணுகியிருக்கிறார்கள்.

அவரும் அடுத்த குடியரசு தலைவர் ரேஸில் இருக்கிறார். இப்போது சமீபத்திய என்ட்ரியாக தெலங்கானா ஆளுநர் தமிழிசையும் நுழைந்திருக்கிறார். தமிழிசை அனைத்து கட்சியினரிடமும் நட்பு பாராட்டக் கூடியவர். இவரை நிறுத்தினால் எதிர்க்கட்சிகள் கூட ஆதரவு கொடுக்கலாம் என்பதால் பாஜக இம்முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தமிழிசை என்ன சொல்கிறார் என ஊடகவியலாளர்கள் மைக்கை நீட்டினார்கள். ஆனால் அவரோ, "அய்யா சாமிகளா ஆள விடுங்க" என்ற முகப்பாவனையுடன் கைக்கூப்பி சிரித்தார் விடைபெற்றுள்ளார்.

முன்னதாக புதுவை செயின்ட்தெரேஸ் வீதியில் உள்ள வண்ண அருவி ஓவியக் கூடத்தில், மறைந்த பத்திரிகையாளர்களுக்கு நிதி உதவி தருவதற்காக நடைபெறும் புகைப்பட கண்காட்சியை ஆளுநர் தமிழிசை இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதுச்சேரி, தெலங்கானா இரு மாநிலங்களில் குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியேற்றியதை சாதனையாக நினைக்கவில்லை. இரு மாநில மக்களையும் மதிக்கிறேன், அதனால்தான் இரு மாநிலங்களிலும் கொடியேற்றினேன். இதில் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை. விதிமீறலும் இல்லை” என்றார்.