×

“புதிய ஐடி விதிகள் என் உரிமைகளை பறிக்கின்றன” – மத்திய அரசை எதிர்க்கும் பாடகர் டி.எம். கிருஷ்ணா!

மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், “ஒரு இசைக் கலைஞர், கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரமான கருத்துரிமை, தனியுரிமை ஆகியவற்றை மதிப்பதாகவும், தனியுரிமை என்பது இசையைப் போல ஒரு அனுபவம். தனியுரிமை என்பது வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, மகிழ்ச்சி, உருவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அவை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும், தன்
 

மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், “ஒரு இசைக் கலைஞர், கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரமான கருத்துரிமை, தனியுரிமை ஆகியவற்றை மதிப்பதாகவும், தனியுரிமை என்பது இசையைப் போல ஒரு அனுபவம்.

தனியுரிமை என்பது ​​வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, மகிழ்ச்சி, உருவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அவை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும், தன் விருப்பப்படும்படி கிடைக்கும்போதுதான் என்னை போன்றோர் ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாகவும் உணரமுடியும். ஒவ்வொரு கலைஞனின் தனியுரிமையையும் அங்கீகரித்துள்ள உச்ச நீதிமன்றம், அதன் தீர்ப்பில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கலைஞன் இருப்பான் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. ஒரு கலைஞனுக்கும், அவனது படைப்பாத்மாவிற்கும் உள்ள தொடர்பே தனியுரிமை.

நமது அரசியலமைப்பில் வழங்கப்பட்ட கற்பனை சுதந்திரத்தை, மத்திய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்ய காரணமாக அமைந்துள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் ஒரு கலைஞன் மற்றும் கலாச்சார வர்ணனையாளரான தனது உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது. சமூக ஊடக சேவைகளின் பயனாளராகவும், ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்ற முறையிலும் எனது உரிமைகள் பறிக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 3 வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.