×

"ஒமைக்ரானை விட 'ஓ மித்ரோன்' ஆபத்தானது" - பிரதமரை வம்பிழுக்கும் சசிதரூர்!

 

நாடு முழுவதும் தற்போது ஒமைக்ரான் அலை வேகமாகப் பரவி வருகிறது. அதேபோல அதைவிட உக்கிரமாக உபி, உத்தரக்காண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அலையும் அடித்து வருகிறது. இதனால் தலைவர்கள் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். மத்திய பாஜக அரசை நோக்கி எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர். பதிலுக்கு அவர்களும் பதிலடி கொடுக்கிறார்கள். அவ்வாறாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் பிரதமர் மோடியை சர்காசமாக, அதாவது மறைமுகமாக பிரதமர் மோடியை நக்கலடித்துள்ளார்.

எப்போதுமே வார்த்தைகளில் நின்று விளையாடுபவர் சசிதரூர். அந்த வகையில் ஒமைக்ரானையும் (Omicron) மித்ரோனையும் ஒப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். மித்ரோன் என்பது பிரதமர் மோடி அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை. இந்தியில் மித்ரோன். தமிழில் நண்பர்களே என அர்த்தம். பிரதமர் மோடி தனது உரையை, "ஓ மித்ரோன்" (O Mitron) எனக்கூறி தொடங்குவார். இதனுடன் ஒமைக்ரானை ஒப்பிட்டு ட்வீட் செய்துள்ள சசிதரூர், “ஓ மித்ரோன் ஒமைக்ரானை விட மிகவும்  ஆபத்தானது. நாங்கள் 'ஓ மித்ரோன்' விளைவை அன்றாடம் கவனித்து வருகிறோம்.


நாட்டி பிரிவினைவாதம், வெறுப்புப் பிரச்சாரங்கள், மதவெறி, நாட்டின் அரசியலமைப்பு சாசனத்தின் மீதான தாக்குதல் மற்றும் வலுவிழக்கும் ஜனநாயகம் ஆகியவை ஓ மித்ரோன் விளைவால் அதிகரித்து வருகின்றன.  ஓ மித்ரோனை பொறுத்தவரை அதில் லேசான உருமாறிய வைரஸ் இல்லை. எப்போதுமே ஆபத்தானது தான்” என ஒமைக்ரானை பாராட்டி பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. மக்கள் சந்திக்கும் பிரச்சினையான ஒமைக்ரானை பாராட்டி பேசுவதா என பாஜக தலைவர்கள் ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளனர்.