×

முதியவர் டி.ஆர்.பாலுவே... அண்ணாமலைக்கு அட்ரஸ், அரசியல் அறிவு இருக்கு- பாஜக

 

இரண்டு ஆண்டு அரசியல் அனுபவமே இருந்தாலும், உங்களைப்போன்ற 60 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரை இன்று தஞ்சாவூர் வீதியில் இறங்கி கொதிக்க வைத்துள்ளாரே, அதுவே எங்கள் தலைவரின் அரசியல் அறிவு என அண்ணாமலையை பொதுவெளியில் தரம்தாழ்ந்து விமர்சித்த எம்பி டி.ஆர்.பாலுவுக்கு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், “முதியவர் TR பாலு அவர்களுக்கு! 1959-ல் தி.மு.க-வில் இணைந்து தற்பொழுது உதயநிதியைக் கொண்டாடும் ஐயா TR பாலு அவர்களுக்கு வணக்கம். நீங்கள், அரசியல் அறிவில்லாத, அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையைப் பற்றி நாம் பேசுவது சரியில்லை. நானே பேசக் கூடாது என்று பேசியுள்ளீர்கள். எங்கள் மாநில தலைவரை அட்ரஸ் இல்லாத அண்ணாமலை, அரசியல் அறிவில்லாத அண்ணாமலை என தரம் தாழ்ந்து குறிப்பிட்டுள்ளீர்கள். 

தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு அட்ரஸ் உண்டு, அவர் ஒன்பது வருடம் பணியாற்றிய கர்நாடக காவல்துறை அவரது அட்ரஸ். இரண்டு ஆண்டு அரசியல் அனுபவமே இருந்தாலும், உங்களைப்போன்ற 60 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரை இன்று தஞ்சாவூர் வீதியில் இறங்கி கொதிக்க வைத்துள்ளாரே, அது எங்கள் தலைவரின் அரசியல் அறிவு. பத்தாண்டுகள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் அனுபவம் இல்லாமல் செயல்பட்டு வரும் தி.மு.க அரசுக்கு வழிகாட்டியாக இருக்கிறாரே தலைவர் அண்ணாமலை, அது அவரது அட்ரஸ்.

முடிவை எடுக்கத் தெரியாமல் திண்டாடி நிற்கும் போதெல்லாம் தி.மு.க அரசை வழிகாட்டி கொண்டு செல்கிறாரே தலைவர் அண்ணாமலை, அது அவரது அரசியல் அறிவு. இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவரை தேசிய பா.ஜ.க மேலிடம் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது என்றால் அதுதான் அவரது அட்ரஸ். சேது சமுத்திரத் திட்டம் ஏன் கூடாது என இத்தனை நாள் வரையில் அரசியல் பேசி வந்தவர்கள் எல்லாம் அத்திட்டத்தில் உள்ள அறிவியல் காரணங்களை விளக்கும் போது, சேது சமுத்திர திட்டம் வந்தால் கனிமொழி, TR பாலு வைத்திருக்கும் கப்பல் கம்பெனிகள் தான் செழிக்கும் என நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி கூறினாரே அதுதான் தலைவர் அண்ணாமலை அவர்களின் அரசியல் அறிவு.

அந்த கப்பல் கம்பெனி கருத்துக்கு இன்றுவரை விளக்கம் அளிக்காமல் பேசாமல் கப்சிப் என நீங்கள் இருக்கின்றீர்களே, அது தான் தலைவர் அண்ணாமலையின் அட்ரஸ். இப்படி பல அரசியல் அறிவு, அட்ரஸ் வைத்திருக்கும் எங்கள் தலைவர் அண்ணன் அண்ணாமலையை நீங்கள் பொதுவெளியில் தரம்தாழ்ந்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு குறைந்தபட்ச தகுதி இருக்கிறதா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன். அரசியலில் மட்டுமல்ல எங்குமே நாம் கொடுப்பது தான் கிடைக்கும். மரியாதையும்! கௌரவமும்! முதியவர் உங்களுக்கு இது புரியும் என நினைக்கிறேன். படபடப்பில் நிதானம் இழக்க வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.