×

"மத்திய அரசே ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?" - லிஸ்ட் போட்டு விமர்சித்த செந்தில்குமார் எம்பி!

 

தருமபுரி மக்களவை உறுப்பினரான செந்தில்குமார் இன்று பூஜ்ஜிய நேரத்தில் உரையாற்றினார். அப்போது அவர், "2014ஆம் ஆண்டுக்கு முன் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கு மேல் சென்றது. அப்போது இருந்த மத்திய அரசால், பெட்ரோல் மீது விதிக்கப்பட்ட வரி ஒரு லிட்டருக்கு 9.48 ரூபாய் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்ட வரி ஒரு லிட்டருக்கு 3.57 ரூபாய் ஆகும். ஆனால் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 40 டாலர் வரை விலை குறைந்தது. அப்போது கூட வாகன எரிபொருட்களின் சில்லறை விலை குறையவில்லை.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மத்திய அரசு வரி குறைத்துவிட்டோம் என்று சொன்னால் கூட அதன் விலை குறையவில்லை. தற்போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விதிக்கப்படும் வரி முறையே ஒரு லிட்டருக்கு 27.90 ரூபாய் மற்றும் 21.80 ரூபாய் ஆகும். இவை எந்த விதத்திலும் 2014ஆம் ஆண்டிற்கு முன்பாக இருந்த குறைவான வரி கிடையாது. தமிழ்நாட்டில் மத்திய அரசு விலை குறைப்புக்கு முன்னதாகவே எங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார்.

இந்த விலை குறைப்பு நடவடிக்கையால் மாநில அரசிற்கு வருடத்திற்கு ரூ.1,160 கோடி இழப்பீடு ஏற்பட்டாலும், மக்கள் வலியை உணர்ந்து முதல்வர் செயல்பட்டார். இன்னும் குறைக்க விரும்பியதில், கடந்த அதிமுக ஆட்சியின் தவறான நிதி மேலாண்மையையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டியதாயிற்று. 2020-21ஆம் ஆண்டு மத்திய அரசால் வசூலிக்கப்பட்ட கலால் வரியானது ரூ.3,71,908 கோடி இவற்றில் மாநில அரசுக்கு பகிரப்பட்ட வருவாய், வெறும் ரூ.19,972 கோடி. ஏன் மத்திய அரசின் இந்த ஏற்றத்தாழ்வு? 

மேலும் எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்க, பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகஸ்தர்களின் நிலை கவலைக்கிடமாகி விட்டது. ஏனெனில், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனைக் கட்டணத்தை உயர்த்தி சுமார் 40 மாதங்களுக்கு மேலாகிறது. ஆகையால் இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அபூர்வா சந்திரா குழுவின் பரிந்துரையைப் பின்பற்ற வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து விநியோகஸ்தர்களின் விற்பனைக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.