#BREAKING செங்கோட்டையன்- பன்னீர்செல்வம் சந்திப்பு
சென்னை கோட்டூர்புரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கடந்த 20 நாட்களாக குரல் கொடுத்து வரும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனுக்கு, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா அணயினர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி.,சத்தியபாமா, ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிநாதன், தம்பி என்கிற சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 10 பேரின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரிய கால கெடுவிற்குள் ஒருங்கிணைக்காவிட்டால் ஒருங்கிணைந்த அதிமுகவிற்கான பணிகளை தொடங்க உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “என்னைப் பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறது. பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள் ஒருமித்த கருத்துக்கள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது கூற இயலாது” என்றார்.