"கோயிலும் அங்கே தான்... சாமியும் அங்கே தான்" - திமுக அரசுக்கு சீமான் ஆதரவு!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகமான சமயம் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்திருந்தது. அதற்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகளை நீக்கிக் கொண்டது. இருப்பினும் முழுமையாக நீக்காமல் பாதுகாப்புடன் செயல்படுகிறது. குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மட்டும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் வாரத்தின் மற்ற நாட்களில் இவற்றுக்கு அனுமதி உண்டு. வார இறுதி நாள்களில் தான் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள்.
ஆகவே அந்தக் கூட்டமே கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க அது ஒரு வாய்ப்பாக அமைந்துவிடக் கூடாது என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. உள்ளபடியே மத்திய அரசும் பண்டிகைக் காலங்கள் எதிர்வருவதாலும் இரண்டாம் அலை முழுமையாக முடியாததாலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. விஷயம் இப்படியிருக்க இந்து மதத்தின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே வழிபாட்டுத் தலங்களைத் திறக்க திமுக அரசு அனுமதி மறுப்பதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஏதோ இந்து கோயில்கள் மட்டும் திறக்காதது போன்ற பிரம்மையை உருவாக்குகிறார்கள். தேவாலயம், மசூதிகள் கூட அந்நாட்களில் திறக்கப்படுவதில்லை. பின் எப்படி திமுகவுக்கு இந்துக்கள் மீது காழ்ப்புணர்ச்சி இருக்கும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. ஆனால் பாஜகவினருக்கு எழவில்லை. அதில் அதிசயம் ஏதும் இல்லை. இச்சூழலில் இது அரசின் சரியான அணுகுமுறை தான் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியூள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "வழிபாட்டுத் தலங்களைத் திறந்தபோது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை. எனவேதான் கொரோனா பரவலை தடுக்க வழிபாட்டுத் தலங்களில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோயிலும் அங்கேதான் இருக்கும், சாமியும் அங்கேதான் இருப்பார். கொரோனா குறைந்த பின் வழிபாடுகளை நடத்திக் கொள்ளலாமே, திடீரென கொரோனா பரவினால் அரசை குறை சொல்வதற்கா?" என்று கூறினார்.