×

செருப்புக்கு இருக்கும் மரியாதைதான் சீமானுக்கும் - முதல்வர் சந்திப்புக்கு பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் 

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சங்கி என்று திமுகவினர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.  பதிலுக்கு திமுகவினரை சங்கி என்று சீமான் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றார்.   இது ஒரு கட்டத்தில் அதிகமாகிப் போக கடுப்பான சீமான்,   அம்பத்தூரில் மேடையில் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று தன் காலில் கிடந்த செருப்பை கழட்டி எடுத்து தூக்கி காட்டி,  கண்ட நாயெல்லாம் சங்கி சங்கின்னு சொல்லுது என்று ஆவேசப்பட்டார்.

 இது மேடை நாகரிகம் கிடையாது.  அரசியல் நாகரிகமும் கிடையாது . ஒரு தலைவர் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று சீமானின் அந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். 

 இது தொடர்பாக திமுக -நாம் தமிழர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.   நாம்தமிழர் மேடையிலேயே ஏறி ரகளை செய்தனர் திமுகவினர்.  திமுகவினரும் நாம் தமிழரும் மாறி மாறி டுவிட்டரிலும் போஸ்டர்களிலும் மோதல் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது, அவரிடம் சீமான் மேடையில் செருப்பை எடுத்துக் காட்டியது குறித்து கேள்வி எழுப்ப ,  ‘’அந்த பொருளுக்கு(செருப்பு) என்ன மரியாதையோ அதே மரியாதைதான் அவருக்கும்’’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

 சீமானுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில் பதிலுக்கு சீமானும் அவர் குறித்து கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் சீமானுக்கு எதிராக கடுமையாக விமர்சித்து இருப்பது நாம் தமிழரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.