×

"அதிமுக தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும்; கூடாது" - லிஸ்ட் போட்ட சசிகலா!

 

அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருந்த சசிகலா, மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வி, திமுக ஆட்சியின் அதிரடி ரெய்டுகள், கொடநாடு வழக்கின் தீவிரம் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கைகள் கீழிறங்கிவிட்டன என்றே சொல்ல வேண்டும். இதை எதிர்பார்த்து காத்திருந்தவராக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் சசிகலா. கூடவே ஓபிஎஸ்ஸும் மறைமுகமாக இணைய நாளுக்கு நாள் எடப்பாடியின் பலம் குறைந்துகொண்டே போகிறது.

குறிப்பாக சசிகலா தொண்டர்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். தற்போது அதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அதிமுக பொதுச்செயலாளர் என்ற அடையாளத்துடன் இருக்கிறது அந்த அறிக்கை. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்திய பேரியக்கம் நம் புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும் வளர்த்தெடுக்கபட்ட ஒரு இயக்கம்.

ஏழை, எளியவர்களின் வாழ்வு வளம் பெற உருவாக்கப்பட்ட இயக்கம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் வழி வந்த என் உயிர் தொண்டர்களுக்கும், என்னை நேசிக்கும் அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். என்னை நேரில் சந்திக்க வருபவர்கள் என் மேல் உள்ள பிரியத்தால் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், மலர்க்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவதை தயவு செய்து தவிர்க்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

அவ்வாறு ஏதேனும் எனக்கு செய்ய விரும்பினால், தாங்கள் வாழுகின்ற இடத்திற்கு அருகில் உள்ள ஏழை, எளியவர்கள், ஆதரவற்றோர் மற்றும் வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும், தற்போது கொரோனா என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவர்களது, வாழ்வாதாரத்தை இழந்துவிட்டவர்களுக்கும், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தாலே அதுவே தாங்கள் எனக்கு அளிக்கும் ஒரு சிறந்த பரிசாக மனதார நான் ஏற்றுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.