×

"நானும் இருக்கேன்".. திடீரென ஆஜரான சரத்குமார் - முதல்வருக்கு வைத்த முக்கிய கோரிக்கை!

 

நடிகர் சரத்குமார் அரசியலுக்கு வந்துவிட்டாலும் கூட இன்னமும் அவர் நடிகராகவே பரிட்சயப்பட்டிருக்கிறார். சொல்லிக்கொள்ளும் படியான எந்த அரசியல் நகர்வையும் அவர் முன்னெடுத்தது இல்லை. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும்போது மட்டுமே அவரின் தலை வெளியேயே தெரியும். சின்ராசை கையிலேயே பிடிக்க முடியாது. கூட்டணிப் பங்கீடு அத்தனை தொகுதிகள் வேண்டும் இத்தனை தொகுதிகள் வேண்டும் என பிரஸ்மீட்டில் வீராப்பாக பேசுவார். இறுதியில் அதிமுகவிடம் இரண்டு சீட்டுகளை வாங்கி அதிலும் இரட்டை இலை சின்னத்தில் தான் அவரின் அகில இந்திய சமத்துவ கட்சி போட்டியிடும். 

அதிமுகவுக்கு முன்னர் திமுக கூட்டணி, பாஜகவுடன் கூட்டணி என இருந்த அவர், நடந்து முடிந்த தேர்தலில் மாற்றத்திற்கான கூட்டணி என ரவி பச்சமுத்து மற்றும் கமலுடன் கைகோத்தார். கடைசியில் முடிவு எப்படி அமைந்தது என எல்லோருக்கும் தெரியும். தற்போது அரசியலில் தன் இருப்பை காட்டிக் கொள்வதற்காக பொது விவகாரங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். அவ்வாறு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற சட்டக்கல்லூரி மாணவர் முகக்கவசம் அணியவில்லை என்று கூறி, காவலர்கள் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்திருக்கிறார்கள்.

இதையடுத்து முகக்கவசம் அணிந்திருந்த மாணவர் ரஹீம் அபராத தொகை செலுத்த மறுத்ததால், காவலர்கள் மாணவர் ரஹீமை கைது செய்து, காவல்நிலையத்தில் அவரை நிர்வாணப்படுத்தி, அவர் மீது சிறுநீர் கழித்து, அருவருத்தக்க, கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அறிந்து பேரதிர்ச்சியும், பதட்டமும் அடைந்தேன். ஜெயராஜ் - பென்னிக்ஸ் வழக்கை போன்று, காவல்நிலையத்தில் மனிதாபிமானமின்றி நடந்தேறும் கொடூர தாக்குதல்கள் இனியும் தொடர கூடாது.

இதுபோன்ற தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட இந்த பிரச்சினையை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடையாள அட்டையை காண்பித்தும் சட்டக்கல்லூரி மாணவர் மீது சர்இரக்கமற்ற தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிற காவலர்கள் சட்டத்தினை கையிலெடுத்து, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் சூழ்நிலை மாறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.