சீட் தராததால் அதிருப்தி- அதிமுகவில் இணைகிறார் ராஜ கண்ணப்பன்?
திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீண்டும் அதிமுகவில் இணைய முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால், அவர் மாற்று அரசியல் முடிவுகளை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தனது பழைய அரசியல் தொடர்புகள் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம் தூது அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமைச்சர் பதவியில் இருந்தபோதும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய பதவிகளை பெற்றுத்தர முடியாத நிலையும் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதுகுளத்தூர் தொகுதியில் செயற்படுவதற்கும் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும், இதனால் தொகுதி மக்களிடையே அதிருப்தி உருவானதாகவும் கூறப்படுகிறது. இதனுடன், அடுத்த தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதியில் புதிய வேட்பாளர் தேர்வு குறித்த உள்கட்சி நடவடிக்கைகளும் வேகமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த சூழலில், கடும் விரக்தியில் உள்ள ராஜ கண்ணப்பன், மீண்டும் அதிமுகவில் சேர்வதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். அவரது கோரிக்கைக்கு அதிமுக பொதுச் செயலாளர் பச்சைக்கொடி காட்டுவாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.