×

OPS Vs EPS.., ரேஸில் முந்தும் EPS – ஒரு விரிவான அலசல்.!

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, பல தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் உடைத்து வெளியேறி தற்போது நிலையான ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருப்பதை தமிழகம் அறியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குபின், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பேற்ற சூழலில், அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்து. 10 நாட்களில் ஆட்சி கவிழும், அடுத்த வாரத்தில் ஆட்சி கவிழும் என எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், அதிமுகவில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைத்து,
 

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, பல தடைகளையும், முட்டுக்கட்டைகளையும் உடைத்து வெளியேறி தற்போது நிலையான ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்திருப்பதை தமிழகம் அறியும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குபின், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பேற்ற சூழலில், அதிமுக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்து.
10 நாட்களில் ஆட்சி கவிழும், அடுத்த வாரத்தில் ஆட்சி கவிழும் என எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், அதிமுகவில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வைத்து, உள்கட்சி குழப்பங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் சூழலில், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படும் விதமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து மீண்டும் புயல் மேகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி – ஓபிஎஸ்க்கு தனித் தனி அணிகள்

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சையில் இருந்துதான் இந்த புயல் மேகம் தொடங்கியது என்றாலும், உள்ளுக்குள் பல நாட்களாகவே நீரு பூத்த நெருப்பாக அணிச்சேர்க்கை உள்ளது என்றே சொல்லலாம்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியா? அல்லது தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமா? என்கிற அதிகாரப் போட்டியில், எடப்பாடி பழனிச்சாமி தன்னை நிலைநிறுத்தியதை தென் மாவட்ட செல்வாக்கால் உடைக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ’எடப்பாடியார் என்றும் முதல்வர் என கொளுத்தி போட, ஓபிஎஸ் தரப்பு அதைக் காரணமாக எடுத்துக் கொண்டுள்ளது.
’எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம். களம் காண்போம். வெற்றி கொள்வோம். 2021-ம் நமதே’ என ராஜேந்திர பாலாஜி போட்ட ட்வீட் பல சர்ச்சைகளை உருவாக்கி விட்டது. அடுத்தடுத்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் என ஆளுக்கொரு கருத்தை முன்வைக்க, அ.தி.மு.கவுக்குள் எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி என தனித் தனி அணிகள் இருப்பது வெளியே தெரிந்து விட்டது.

அதை வெளிக்காட்டும் விதமாக, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என திடீரென வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
அதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும், ஓ.பி.எஸ் வீட்டிலும் மூத்த அமைச்சர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்பட்ட நிலையில், அன்று மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில், கட்சியினர் பொதுவெளியில் கருத்துக் கூறுவதை தவிர்க்குமாறு அதிமுக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்து.

அரசு அதிகாரம் இருப்பதால் எடப்பாடிக்கு இவ்வளவு ஆதரவா ?

அரசு அதிகாரம் இருப்பதால் எடப்பாடிக்கு ஆதரவு அளிக்கிறார்களா என்றால் அப்படி மட்டும் கூற முடியாது என்கின்றனர் கட்சிக்குள். ஓபிஸ் கட்சியில் இருந்து வெளியேறி தனி அணியாக செயல்பட்ட போதும், மீண்டும் கட்சிக்குள் இணைந்தபோதும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்கிற அதிருப்தி அவருடன் இருந்தவர்களுக்கு உள்ளது.
ஓபிஎஸ் உடன் சென்றவர்களில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜ் மட்டும் அமைச்சரவையில் சேர்ந்ததுடன், அவரும் எடப்பாடி பக்கம் சாய்ந்தது அதிகாரம் மட்டும் காரணமல்ல. அதுபோல, தென் மாவட்டங்களிலும் ஓபிஎஸ் செல்வாக்கை இழந்து வரும் நிலையில், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி. உதயகுமார் போன்றோர் தீவிரமாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களாக மாறியுள்ளனர்.

அதனால்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை தீர்மானித்து களம் இறங்குவதில் எடப்பாடி தரப்பு மிகவும் உறுதியாக உள்ளது. இதன் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றாலும், அவரது தரப்பு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஓ பன்னீர்செல்வம் தரப்பு சில மாவட்ட செயலாளர்களை கையில் வைத்திருந்தாலும், அவர்களும் கட்சிக்குள் முரண்பாட வாய்ப்பில்லை என்பதே தகவலாக உள்ளது.

சசிகலா வெளியே வந்தால் முரண்பாடு அதிகரிக்குமா?

சசிகலா வெளியே வந்தால் பன்னீர்செல்வம் துரோகி என்று முத்திரை குத்தப்படுவதோடு, கட்சியில் ஓரங்கட்டப்படுவார் என்கிற பேச்சும் உள்ளது. அதனால்தான் சசிகலா வெளியே வருவதற்கு முன்பே தன்னுடைய இருப்பை தக்க வைக்க அதற்கான அரசியலை தொடங்கி உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடக சிறைத்துறை முற்றுப்புள்ளி வைத்தது. இதனிடையே, வரும் 28ம் தேதி சசிகலா விடுதலையாகிறார் என்று கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை கிளம்பியது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஓபிஎஸ் பின்னணியில் மீண்டும் பாஜக ?

முன்பு நடந்ததுபோல, ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னால் பாஜகவின் தூண்டுதல், ஆதரவு இருக்கிறதா என்பதும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விநாயகர் ஊர்வலத்துக்கு தடை, எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி வண்ணம், எஸ்.வி.சேகர் மீது வழக்கு உள்ளிட்டவற்றில் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் பாஜக தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதால், பன்னீர்செல்வம் அணியினரை துருப்பாக இறக்கி மீண்டும் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என்கிற சந்தேகமும் எழுதுள்ளதாக கட்சிக்குள் சலசலக்கிறரகள்.
இந்த பின்னணியை விவரிக்கும் சிலர் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தனது மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் இடம் பெற வேண்டும் என ஓபிஎஸ் மூவ் செய்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.
ஒபிஎஸ் தனது இளைய மகன் ஜெயபிரதீப்பை தேனி மாவட்ட அரசியலில் களம் இறக்கியுள்ள நிலையில், அவருக்கு எம்.எல்.ஏ சீட் வாங்குவதில் போட்டி ஏற்படக்கூடாது என்பதற்காக கலகத்தை உருவாக்குகிறார். இந்தநேரத்தில் குழப்பம் ஏற்படுத்தினால், அவரை சமாதானம் செய்யும் விதமாக பல கோரிக்கைகளை சாதித்துக் கொள்ள முடியும் என்பதும் அவரது நோக்கமாக உள்ளதாக கட்சிக்குள் பேசப்படுகிறது.

கடைசியாக தற்போது வெளி வந்த கூட்டறிக்கையில் யார் முதல்வர் என்கிற முடிவை எட்டாமல், சண்டைக்கான முடிவு சொல்லாமல் வாய்ப்பூட்டு மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சண்டை இப்போது ஓயாது என்றே கூறப்படுகிறது. இந்த அறிக்கை விடுவதற்குகூட 2 பேரும் அமர்ந்து பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

கட்சியிலும், ஆட்சியிலும் 2 பவர் செண்டர் நீடிப்பதை கட்சிக்குள் பல சீனியர்கள் விரும்பவில்லை என்றாலும், கடும் நெருக்கடிகளுக்கு இடையில், கட்சியையும், ஆட்சியை நகர்த்திக் கொண்டு வந்ததுடன், மக்கள் மத்தியில் எளிமையான முதலமைச்சர் என்கிற இமேஜ் உருவாகி உள்ளதால் அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே அனைவரது ஆதரவும் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுக்குள் நடக்கும் இந்த குழப்பங்கள் வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தை சூடாக வைக்க உள்ளது என்பதை அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.

-நீரை மகேந்திரன்