×

இரவு ஊரடங்கு.. அரசியல் கூட்டத்துக்கு தடை.. அரசியல் தலைவர்கள் மீது வழக்கு.. பஞ்சாப் முதல்வர் அதிரடி

பஞ்சாபில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கை மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தியுள்ளார் அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங். மேலும் அரசியல் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுதும் கொரோனா 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் முதலில் 12 மாவட்டங்களுக்கு மட்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு வரும்
 

பஞ்சாபில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கை மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தியுள்ளார் அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங். மேலும் அரசியல் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுதும் கொரோனா 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. பஞ்சாப் மாநிலத்திலும் நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில் முதலில் 12 மாவட்டங்களுக்கு மட்டும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு வரும் 30-ம் தேதி முதல் நீட்டிக்கப்படுவதா பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களைத் திரட்ட தடை விதிக்கப்படுகிறது. அதை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் உள்ளரங்கில் 50 பேரும் ஊர்வலமாக 100 பேர் வரை செல்லலாம். அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் பணிபுரியும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் வரும் 30ம் தேதிவரை மூடப்பட்டிருக்கும். ஷாப்பிங் மால்களில் ஒரு கடையில் ஒரே நேரத்தில் 10 பேருக்கு மேல் நிற்கக்கூடாது. ஷாப்பிங் மாலில் ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் செல்லக்கூடாது என்று பஞ்சாப் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், அண்மையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிரோன்மணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் பாதல் உள்பட பல அரசியல் தலைவர்கள் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றனர். அந்த கூட்டங்களில் கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்கள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிடம் கேட்டனர்.

சுக்பீர் சிங் பாதல்

இதற்கு முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது: மூத்த அரசியல் தலைவர்களே இப்படி நடந்து கொண்டால், கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்து மக்கள் எவ்வாறு தீவிரமாக இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். இது போன்ற விதி மீறல்களை சமாளிக்க எனது அரசாங்கம் கடுமையாக இருக்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் அரசியல் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இரவு நேர ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்துமாறு காவல் டிஜிபி திங்கர் குப்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.