×

அதிமுக தற்போது நான்காக உடைந்துள்ளது- பிரேமலதா

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள் பால், கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பால் தட்டுப்பாடு உள்ளது பால் விநியோகம் முறையாக நடக்கவில்லை. இது யாருடைய தவறு. எதிர்க்கட்சிகள் எதற்காக இதை தூண்டி விடப் போகிறார்கள். ஆளும் கட்சி பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் தான் முழு காரணமே தவிர. அவர்களால் அதை கையாள முடியவில்லை என்றால் உடனே எதிர்க்கட்சி மீது வழி கூறுவதை விட்டுவிட்டு அத்துறையின் அமைச்சர் நாசர் பால் பிரச்சனையில் உடனடியாக கவனம் செலுத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், அதை விடுத்து அடுத்தவர்கள் மீது குறை சொல்வது நிச்சயம் ஏற்புடையதல்ல. பால் உற்பத்தியாளர்களையும் ஆவின் பால் வினியோகம் செய்யும் அதிகாரிகளையும் அழைத்து பேசி சுலபமாக இப் பிரச்சனையை கையாள முடியும். தேமுதிக எப்போதும் விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் துணை நிற்கும்.  பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது.

அதிமுகவுக்குள் பல விரிசல்கள் உள்ளது, அவர்களே நான்காக பிரிந்துள்ளனர். அவர்கள் முதலில் ஒன்று சேர்ந்தால் தான் பலத்தை நிரூபிக்க முடியும். பின்னர் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறார்களா? இல்லையா என்பதை அந்த கட்சியின் தலைமை முடிவு செய்யட்டும். ஆனால் கூட்டணிக்குள் இருந்து கொண்டு ஒருவரை ஒருவர் திட்டுவது ஆரோக்கியமானது அல்ல, தமிழ்நாட்டில் தமிழ் மொழி தேர்வை ஐம்பதாயிரம் மாணவர்கள் எழுதாதது தமிழர்களாகிய நமக்கு முதல் அவமானம், மக்களுக்கு தேர்தலில் மீது நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது. அதேபோல் மாணவர்களுக்கு தேர்வின் மீது நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இது எதிர்காலத்துக்கு ஆரோக்கியம் கிடையாது. நிச்சயம் இது தடுக்கப்பட வேண்டும். தேமுதிக ஏற்கனவே அறிவித்த பல்வேறு திட்டங்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தற்போது ஆட்சியாளர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

அதன்படி தான் பாண்டிச்சேரி பட்ஜெட்டில் பெண் பிள்ளைகளுக்கு 50,000 வைப்பு நிதியாக அறிவித்த திட்டமும், இந்தத் திட்டத்தை கடந்த 2009ம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளில் பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பெண் பிள்ளைகளை தேர்வு செய்து சொந்த நிதியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தினார்” என்றார்.