×

எதிர்கட்சிகள் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு...

 

மாநிலங்களவை எம்பிக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, மக்களவையில் எதிர்கட்சியினர் அலளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது டிசம்பர் 23ம் தேதி வரை நடக்க உள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. இந்த கூட்டத்தொடரில் வேளாண் சட்ட ரத்து மசோதா உட்பட 25 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன .

அவற்றில் ,  போதை மருந்து தடுப்பு மசோதா, சிபிஐ அமலாக்கப்பிரிவு இயக்குனர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு மத்திய அரசு ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணைய திருத்த மசோதா, தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணைய திருத்த மசோதா, குடியேற்ற மசோதா, ஆள்கடத்தல் தடுப்பு மசோதா, உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற  நீதிபதிகளின் சம்பளத்தை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்டவை முக்கியத்துவம் பெறும்கின்றன.

அதே சமயம், வேளாண் சட்டங்கள் , பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, பெகாசஸ் உளவு விவகாரம்  உள்ளிட்ட  பிரச்சனைகளை அவையில் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, காலை அவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

பின்னர் மீண்டும் அவை கூடியபோது எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே சுமார் நான்கு நிமிடங்களில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.  பின்னர் மாலையில் கூடிய மாநிலங்களவை 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் கூட்டத்தொடரின் போது 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, மக்களவையில்  எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.