×

நிரந்தர முதலமைச்சரா? வருங்கால முதலமைச்சரா? – அதிமுகவின் முதல்வர் யுத்தம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் நகர்வுகள் விறுவிறுப்படைய தொடங்கியுள்ளன. கருணாநிதி இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் திமுக சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வரும் அதே வேளையில், ஜெயலலிதா இல்லாத போதும் சட்டமன்ற தேர்தலில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என அதிமுக தரப்பில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பது தெரிந்த நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போர்க்கொடி
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் நகர்வுகள் விறுவிறுப்படைய தொடங்கியுள்ளன. கருணாநிதி இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் திமுக சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வரும் அதே வேளையில், ஜெயலலிதா இல்லாத போதும் சட்டமன்ற தேர்தலில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பெற்றுவிட வேண்டும் என அதிமுக தரப்பில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என்பது தெரிந்த நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தும் நிலையில், இபிஎஸ் ஆதரவாளர்கள் தாங்கள்தான் என தலை தூக்கியுள்ளனர்.

அமைச்சர் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் முதல்வர் பழனிசாமி ஆதரவாகப் பேட்டியளிக்க, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோர் தயக்கத்தோடு பதில் கூறி வருகின்றனர்.
ஏற்கெனவே சுதந்திர தினத்தின் போது நடந்த குழப்பங்கள் ஓய்ந்திருந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரச்சினை மீண்டும் வெடித்துள்ளது.

கட்சி அலுவலகத்திற்கு வந்த ஓபிஎஸை பார்த்து ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் வருங்கால முதல்வர் என்றும் அவர்களின் ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பினர். முதல்வர் பழனிசாமி வந்ததும், நிரந்தர முதலமைச்சர் எடப்பாடியார் என்று அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டுள்ளனர். இதனால் கட்சிக்குள் நீடிக்கும் குழப்பம் வெளிப்படையாக தெரிந்துள்ளது.

வருங்கால முதல்வர் ஓபிஎஸ்?

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே, முதலமைச்சராக அறிமுகப்படுத்தப்பட்டவர் தற்போதைய துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம். நிதித்துறை அமைச்சராகவும் நன்கு பரிட்சியமான இவர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக பதவியேற்றார். ஆனால் சசிகலா வலியுறுத்தலின் பேரில் முதல்வர் பதவியைத் துறந்ததாக அறிவித்து, தர்ம யுத்தம் தொடங்கி கட்சியை உடைத்தார். பின்னர் முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியுடன் சுமுக நிலைக்கு வந்து கட்சிக்குள் மீண்டும் தன்னை இணைத்து கொண்டார்.

அதனால்தான், ஜெயலலிதாவால் கைகாட்டப்பட்ட ஓ.பி.எஸ்-க்கு, மக்கள் செல்வாக்கு இருப்பதாகவும் , அவரை முன்வைத்து சட்டமன்ற தேர்தலில் களம் கண்டால் வெற்றி நிச்சயம் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர். மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் ஓபிஎஸ் மனதிலும் உள்ளது என சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதனால்தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லவிருந்த சசிகலா கூவத்தூரில் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார்.

அதன் பின்னர், சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தாருக்குக் கட்சியில் எந்த சம்பந்தமும் இல்லை என சாமர்த்தியமாக முடிவெடுத்தவரும் இதே பழனிசாமி தான். திடீர் முதல்வராக பழனிசாமி அமர்த்தப்பட்ட போது ஆட்சி 100 நாட்களில் முடிவுக்கு வரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் அதையெல்லாம் சாமர்த்தியமாகத் தகர்த்துத் தொடர்ந்து 4 ஆண்டுகள் ஆட்சியை தக்க வைத்துள்ளவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக எனும் மிகப்பெரிய கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்றும் தொண்டர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளில் செய்த நலத்திட்டங்கள், கொரோனா பேரிடர் காலத்தில் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளை அரசியல் பிரச்சாரமாக முன்வைத்து மீண்டும் முதல்வராகி விட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இதையெல்லாம் கருத்தில் வைத்து இபிஎஸ் ஆதரவாளர்கள் நிரந்தர முதலமைச்சர் எடப்பாடியார் என்று முழங்கி வருகின்றனர்.

எம்ஜிஆருக்குப் பிறகு, மீண்டும் கடந்த 2016 ஆண்டு “ஆட்சியை தக்கவைத்த முதல்வர்” என்ற பெருமையைப் பெற்றார் ஜெயலலிதா. அவரின் மறைவுக்கு பிறகு தொடர்ந்து அதிமுக, ஆட்சியைத் தக்கவைக்குமா? இல்லையா என்பது முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பொறுத்தே அமையும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் அதிமுக விசுவாசிகள். என்னதான் பொதுவெளியில் முதல்வர் வேட்பாளர் குறித்துப் பேசக் கூடாது என உத்தரவு போட்டாலும் தொண்டர்களின் விருப்பத்தை புறந்தள்ள முடியாது என்பது நிதர்சனமான உண்மை.

-மணிக்கொடி மோகன்