×

“அம்மாவின் முடிவை மாற்றுவதா?… கைவிடுங்கள் ஸ்டாலின்” – கொந்தளித்த ஓபிஎஸ்!

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றும் முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகக் கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றவுடன், ஓமந்தூராரில் அமைந்துள்ள கட்டிடம், சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை என்பதாலும், பயன்படுத்தக்கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலகப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், இந்தக் கட்டிடம் இல்லை என்பதாலும், இருவேறு
 

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றும் முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாகக் கைவிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றவுடன், ஓமந்தூராரில் அமைந்துள்ள கட்டிடம், சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை என்பதாலும், பயன்படுத்தக்கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலகப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், இந்தக் கட்டிடம் இல்லை என்பதாலும், இருவேறு கட்டிடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும், சட்டப்பேரவையும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து இயங்க வழிவகை செய்துவிட்டு, அந்த இடத்தில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியையும் உருவாக்கினார். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.

இதன்மூலம், ஆண்டுதோறும் மாணவ, மாணவியர் இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, மருத்துவம் பயின்று, இந்த நாட்டின் சிறந்த மருத்துவர்களாக ஆகி வருகின்றனர். இது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் இங்குள்ள பல துறை உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். கரோனா காலக்கட்டத்தில் இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அனுமதிக்கப்பட்டு, நல்ல சிகிச்சை பெற்று , குணமடைந்து வீடு திரும்பினர். இந்த மருத்துவமனை அனைவரின் ஏகோபித்த ஆதரவினையும், பாராட்டினையும், வரவேற்பினையும் பெற்றுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்து, அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு செய்ததையடுத்து, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டிடம் மீண்டும் சட்டப்பேரவையாகவோ அல்லது சட்ட மேலவையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருடைய மனங்களிலும் எழுந்துள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரையில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனையை கிண்டி, கிங் வளாகத்தில் உருவாக்குவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில், சிறப்பாக, அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் செயலட்டுக்கொண்டிருக்கின்ற ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து கிங் மருத்துவ வளாகத்திற்கு மாற்றப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதனை உடன் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.