சவாலான அரசியல் சூழல், எதிர்க்கட்சிகளின் முணுமுணுப்புகளுக்கு மத்தியில் அமைதியாய் காய் நகர்த்தும் முதல்வர்... 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு?
கடந்த மே 10ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழகத்தின் 12-வது முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். ஜூன் 10ம் தேதியோடு அதாவது இன்றோடு விஜய் அரசு பொறுப்பேற்று சரியாக ஒரு மாதம் நிறைவடைகிறது. இந்த ஒரு மாத தவெக ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
பதவியேற்ற முதல் நாளே, தமிழக மக்களின் நீண்டகால தேவைகளை நிறைவேற்றும் வகையில் வீட்டு மின்நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற விஜய் கையெழுத்திட்டார். அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 'சிங்கப் பெண்' சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டதுடன், மாநிலத்தை உலுக்கி வரும் போதைப்பொருள் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழிக்க 65 தனிப்படை பிரிவுகள் அமைக்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளைக் கண்டறிந்து மூட உத்தரவிட்டதில், முதற்கட்டமாக ஒரே நாளில் 50 கடைகள் உடனடியாக மூடப்பட்டன. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என 16 லட்சம் பேருக்குப் பயனளிக்கும் வகையில் அகவிலைப்படியை 58 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தினார்.
உள்ளாட்சி அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் கோவில்களுக்கு ஆன்லைன் தரிசன முறை போன்ற நிர்வாக ரீதியான மாற்றங்களையும் கொண்டு வந்தார். ஜவுளித் துறையின் நெருக்கடியைப் போக்க பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்குத் தனது முதல் அதிகாரப்பூர்வக் கடிதத்தை எழுதினார். தொழில்துறை வளர்ச்சியிலும் தடம் பதிக்கும் வகையில், பி.எம்.டபிள்யூ., யமஹா போன்ற உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டார். ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்கும் "அம்மா உணவகங்களை" மீண்டும் சீரமைத்து, தரமான உணவுகளைத் தொடர்ந்து வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விஜய்யின் இந்த ஒரு மாத ஆட்சியை எதிர்க்கட்சிகள் அவ்வளவு எளிதாக விட்டுவிடவில்லை. ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மின்தடைப் பிரசினை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, அரசு நிர்வாகங்களில் தலையிடும் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் நொடிக்கு ஒரு முறை விஜய்க்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்க செய்தியாய் போட்டு தள்ளின. உள்ளாட்சிகளில் குப்பைகள் அகற்றும் பணி மந்தமாக இருப்பது மற்றும் சட்டம்-ஒழுங்கு ரீதியான சவால்களை முன்வைத்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி, பிரதமருடன் குறுகிய நேர சந்திப்பு வரை அத்துணையும் சர்ச்சையும் சஞ்சலமுமாய் நகர்ந்தன.
இதற்கு ஒரு படி மேலே போய் திமுக தலைவர் ஸ்டாலின், தவெக அரசு 3 மாதம் கூட தாங்காது என்று நேரடியாகவே அரசியல் அட்டாக் செய்துள்ளார். அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தனது கண்டனத்தைப் பதிவு செய்யத் தவறவில்லை. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்கள், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பெரிய அளவில் ஊழல் குறைந்திருக்கிறது என்றும், சிஸ்டம் மாற 3 மாத காலமாவது ஆகும் என்பதால் தற்போதைய நகர்வுகள் வரவேற்கத்தக்கவை என்றும் ஆதரவு தந்துள்ளனர். மொத்தத்தில் சவாலான அரசியல் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் முணுமுணுப்புகளையும், எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களையும் தாங்கி, முதல் மாதப் பரீட்சையில் விஜய் ஒரு முதிர்ச்சியான முதல்வராகக் காய்களை நகர்த்தியுள்ளார் என்பதே தற்போதைய அரசியல் நிலவரம். அதற்கு முழு முதல் காரணம் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் விஜய் அமைதியாய் கடந்து கொண்டிருக்கிறார்.